கோவை காரமடையில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமி, பள்ளியின் வேன் டிரைவர் மற்றும் க்ளீனரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த காரமடையில் உள்ள வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கை, கால் வலிப்பதாகவும், மயக்கம் வருவதுபோல் உள்ளது என்றும் தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை சோதித்த டாக்டர்கள், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த தனியார் பள்ளி வேன் டிரைவரான பிளிச்சி ஊராட்சி ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 37), உதவியாளரான கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (55)ஆகியோரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளி வேனில் கடைசி நிறுத்தத்தில் தினமும் இறக்கிவிடுவது வழக்கம்.அப்போது வேனில் இந்த சிறுமியை தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்ட டிரைவரும், உதவியாளரும் அந்த சிறுமியை பலவந்தப்படுத்தி உள்ளனர். குறிப்பிட்ட தினத்தன்று, சிறுமியின் வீட்டிற்கு செல்லும் வழியில் போகாமல், வேற வழியில் சென்று, அந்த சிறுமிக்கு மயக்க ஊசி போட்டுள்ளனர். பின்னர் வேனை நிறுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க ஊசி போட்டுள்ளதை சிறுமியும் கூறினாள். வழக்கமாக சிறுமி வீட்டிற்கு 4 மணிக்கு செல்லுவார். ஆனால் சம்பவத்தன்று அவள் 5 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு கொண்டுச் சென்று இறக்கி விடப்பட்டு உள்ளாள். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.