தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. கோவையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மும்முனை போட்டி நடந்தது. குறிப்பாக பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை களம் கண்டார். ஸ்டார் வேட்பாளர்களை களம் இறங்கிய தொகுதியாக மாறியது. பரப்புரையும் தீவிரமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று கோவை மக்களவைத் தொகுதியில் பல்வேறு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. தோராயமான இங்கு 70% வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தல் முடிந்த பின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“