/indian-express-tamil/media/media_files/2025/03/18/U0Ra2GwirXWbCKXF5IJn.jpg)
ஊட்டி தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானம் மூடல்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 18, 2025 20:15 IST
மற்றவர்களை முதலமைச்சராக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தேன் - டிடிவி தினகரன்
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர்: “மற்றவர்களை முதலமைச்சராக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தேன். எம்.எல்.ஏ-க்கள் பலர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க ஒப்புக்கொள்ளாமல் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை பாதுகாத்துதான் பழனிசாமியை முதலமைச்சராக்கினோம்” என்று கூறினார்.
- Sep 18, 2025 19:50 IST
சேலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்
சேலம் குரும்பட்டி உயிரியல் பூங்கா பேருந்து வழித்தடத்தில், அரசுப் பேருந்தில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் சீண்டியுள்ளார். இதுகுறித்து நடத்துநரிடம் புகார் அளித்தும் அவர் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர், பேருந்து நிலையத்திற்கு விரைந்து வந்துள்ளனர். சீண்டலில் ஈடுபட்டவர் இல்லாத நிலையில், ஆத்திரத்தில் ஓட்டுநரை கடுமையாகத் தாக்கியதுடன், தடுக்க வந்த நடத்துநரையும் சரமாரியாகத் தாக்கினர்.காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Sep 18, 2025 19:11 IST
திருமங்கலத்தில் அரசுப் பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மாணவர்கள்
மதுரை திருமங்கலம் பகுதியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்ட 37B என்ற அரசு மகளிர் இலவச பேருந்து, திருமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் படிக்கட்டு உடைந்து கீழே விழுந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணித்த 3 மாணாக்கர்கள் கீழே விழுந்த நிலையில் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.
- Sep 18, 2025 18:21 IST
2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு 2026 ஜனவரி மாதம் நடைபெறும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
- Sep 18, 2025 18:16 IST
நாகையில் விஜய் பிரசார இடத்தை மாற்ற கோரிக்கை
நாகப்பட்டினத்தில் விஜய் பிரசாரம் செய்யும் இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இருப்பதால் மாற்று இடம் வழங்க மாவட்ட எஸ்.பி.,யிடம் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
- Sep 18, 2025 17:48 IST
டி.எஸ்.எஸ்.சி புதிய தலைவராக மணீஷ் பதவியேற்பு
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் (DSSC) புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றுக்கொண்டார். 1947ல் இங்கு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில், முப்படை அதிகாரிகளுக்கு திறன், வியூக வகுப்பு, பணியாளர் நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கிறது.
- Sep 18, 2025 17:13 IST
அரசு பணி வாங்கித் தருவதாக ரூ.45.4 லட்சம் மோசடி
மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 45.4 லட்சம் மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி வான்மதி தலைமறைவு, போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- Sep 18, 2025 16:55 IST
ஊட்டி தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானம் மூடல்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் காலமான நடப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தையொட்டி 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அந்த செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. இவை ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மாடங்களில் அடுக்கி வைக்கப்படும் என தெரிகிறது. நாள்தோறும் இந்த புல் மைதானங்களில் தண்ணீர் பாய்ச்சி சமன் செய்து சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த 2 புல் மைதானங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Sep 18, 2025 16:54 IST
மயிலாடுதுறை அருகே விவசாயிகள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கம் என புகார் எழுந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினார்.
- Sep 18, 2025 16:49 IST
டெல்டாவில் பலத்த மழை; 100 ஏக்கர் சம்பா மூழ்கியது
டெல்டா மாவட்டங்களில் நேற்றும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. திருச்சியில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 1.30 மணி நேரம் கொட்டியது. இதேபோல் திருச்சி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறையில் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை பலத்த மழை பெய்தது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை பொழிந்தது. திருவிடைமருதூர் தாலுகா சன்னாபுரம், கோவில் சன்னாபுரம் ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.
- Sep 18, 2025 16:21 IST
காய்ச்சலால் ஹோமியோபதி கல்லூரி மாணவி பலி
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஜினி தெரசா உயிரிழந்தார்.
- Sep 18, 2025 16:18 IST
சேலம்: ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
சேலம், ஆத்தூர் அருகே துலுக்கனூரில் நிலம் அளவீடு செய்வதற்காக ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் ஜீவிதா மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
- Sep 18, 2025 16:00 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், குடமுழுக்கு நிகழ்வுக்குள் புது மண்டபம் புனரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
- Sep 18, 2025 15:58 IST
சாலை, வடிகால் வசதி கோரி பெண்கள் முற்றுகை
ராமநாதபுரம்: தொண்டி பேரூராட்சி 13-வது வார்டில் சாலை, வடிகால் வசதி கோரி பெண்கள் இன்று அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆவேசமடைந்த மக்கள், அதிகாரிகள் இல்லாததால் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்க முயன்றனர். பின் ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
வடிகால் பணிக்கு டெண்டர் விடப்பட்டுவிட்டது; சாலைப் பணி டெண்டர் வரும் 30-ஆம் தேதி விடுக்கப்படும், என ஆணையர் உறுதியளித்தார்.
- Sep 18, 2025 15:39 IST
இடஒதுக்கீட்டுத் தியாகிகளுக்கு மரியாதை - பா.ம.க-வினர் மோதல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும், தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.
- Sep 18, 2025 15:37 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
கடந்த மாதம் 13ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேருக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, அந்நாட்டில் ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
- Sep 18, 2025 14:59 IST
தெருக்களை மறைத்து வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர்கள்
நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிக்கு நாளை (19.09.2025) வரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க, 10-க்கும் மேற்பட்ட தெருக்களை மறைத்து பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டதால், அத்தியாவசியப் போக்குவரத்து மற்றும் ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அக்கியம்பட்டி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Sep 18, 2025 14:58 IST
மாணவர்களுக்கும், ஓட்டுனருக்கும் இடையே கடும் மோதல்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே, பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களுக்கும், அவர்களை இறக்கிய அரசுப் பணிமனை ஓட்டுனருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இன்று காலை நடந்த இந்தச் சம்பவத்தில், ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 18, 2025 14:57 IST
அம்மா உணவகத்தில் ஆய்வு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகள் இன்றி இருந்த அம்மா உணவகத்தை, சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் நகராட்சி மன்ற தலைவி கௌசல்யா வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென ஆய்வு செய்தனர். உடனடியாக, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டன.
"திராவிட மாடல் ஆட்சியில், அம்மா உணவகத்தின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதுவே எங்கள் ஆட்சிக்குச் சாட்சி," - எம்.எல்.ஏ. ராஜா பேட்டி
- Sep 18, 2025 14:53 IST
நாய் கடித்ததில் ஆறு வெள்ளாடுகள் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம், ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவருக்குச் சொந்தமான ஆறு வெள்ளாடுகள் நாய் கடித்ததில் உயிரிழந்தன
- Sep 18, 2025 14:43 IST
கட்சியினரே கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு கட்சியினரே கருப்பு கொடி காட்டினர்
- Sep 18, 2025 14:33 IST
இரு லோடு ஆட்டோக்கள் மோதிய விபத்து
மதுரை - பரமக்குடி நெடுஞ்சாலையில் வேந்தோணி என்ற இடத்தில் இரு லோடு ஆட்டோக்கள் மோதிய விபத்தில் இரண்டு ஓட்டுநர்களுக்கும் காயமடைந்த நிலையில், சாலையோரம் நின்ற மூன்று கார்கள் சேதமடைந்தது,
- Sep 18, 2025 13:30 IST
கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த சொந்த கட்சியினர்
பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது சொந்த கட்சியினரே கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உட்கட்சிப் பூசலை தடுக்கத் தவறிய அவர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
- Sep 18, 2025 12:57 IST
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
நெல்லையில் பைக் உரிமையாளரை கார் பேனட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற எஸ்.எஸ்.ஐ காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எஸ்எஸ்ஐ காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
- Sep 18, 2025 12:40 IST
தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..
கள்ளக்குறிச்சியில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Sep 18, 2025 12:07 IST
கொள்முதல் குறைவால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம்
திருவாரூர் நன்னிலம் பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் குறைவால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. மழையில் நனைந்து நெல் வீணாவதால், விவசாயிகள் பெரும் அவதியடைந்தனர். கூடுதல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Sep 18, 2025 11:46 IST
ஈரோட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் சோதனை
ஈரோட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடக்கிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரிகோ லிமிடெட் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் கிளைகள் உள்ளன.
- Sep 18, 2025 11:13 IST
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். முல்லை பெரியார் ஒருபோக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. 1,130 கன அடி வீதம் மொத்தம் 120 நாட்களுக்கு 8,493 மி.க. அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
- Sep 18, 2025 10:53 IST
நெல்லையில் வாகன ஓட்டியிடம் தகராறு: எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்
நெல்லையில் வாகன ஓட்டியிடம் தகராறு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. விபத்தை அடுத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டத்தில் வாகன ஓட்டியை காரை ஏற்றி கொல்ல முயன்றதாக புகார் எழுந்தது.
- Sep 18, 2025 10:52 IST
தேனியில் புறம்போக்கு நிலத்தில் செயல்படும் குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம்
பெரியகுளத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும் கல், கிராவல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் கனிமங்கள் எடுத்த குவாரிகளுக்கு ரூ.19 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேனி, பெரியகுளம் வட்டத்தில் உள்ள 10 குவாரிகளுக்கு ரூ.19.56 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- Sep 18, 2025 10:19 IST
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் மீது வழக்கு
விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம். ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு. பட்டாசு ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆலை உரிமையாளர், அவரது மகன் தலைமறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 18, 2025 09:21 IST
கள்ளக்குறிச்சி அருகே தேனீ கொட்டியதில் ஒருவர் மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி அருகே தேனீ கொட்டி ஒருவர் மரணமடைந்த நிலையில், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்ததும் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் வாந்தி பேதி ஆகியுள்ளது.இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்,
- Sep 18, 2025 08:51 IST
பைக் ஓட்டுநரை காரில் இழுத்து சென்ற எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
நெல்லையில் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பைக் ஓட்டுநரை காரில் இழுத்து சென்ற எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
- Sep 18, 2025 08:10 IST
அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 36 பேருக்கு நடுக்கம்
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதாக புகார் மாற்று மருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து 30க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை சீரானது; 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம், மயிலாடுதுறை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பு மருந்து, ஊசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகே உடல்நலக்குறைவுக்கான காரணம் தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.