/indian-express-tamil/media/media_files/2025/06/24/madurai-high-court-2025-06-24-22-10-02.jpg)
ஐகோர்ட் கிளை
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 05, 2025 18:22 IST
வழக்குகளில் முறையாக ஆஜராக வேண்டும்; மத்திய அரசு வழக்கறிஞருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தரை தட்டி நிற்கும் கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு பயணிக்க அனுமதிக்க கோரிய வழக்கு விசாரணையின்போது. ஏராளமான வழக்குகளில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதில்லை. கால அவகாசம் மட்டும் கேட்கப்படுவதால் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் முறையாக வழக்குகளில் ஆஜராகி பதில் மனு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தியுள்ளது
-
Aug 05, 2025 17:48 IST
வார இறுதி நாட்கள் - 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதி சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Aug 05, 2025 17:15 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,769 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 92.23 டிஎம்சியாக உள்ளது.
-
Aug 05, 2025 17:01 IST
நீலகிரிக்கு ரெட் அலர்ட் - வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்
நீலகிரி, கோவைக்கு நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரியில் சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
-
Aug 05, 2025 16:56 IST
தனிமனித சுதந்திரம் மீறப்படக் கூடாது : ஐகோர்ட் கிளை
தமிழ்நாடு முழுவதும் அடிப்படை தேவைகள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது. பட்டியலின மக்கள் குறித்து தவறாக பேசியவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "தமிழ்நாடு முழுவதும் அடிப்படை தேவைகள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஒருவரின் தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகள் யாராலும் எந்த நிலையிலும் மீறப்படக் கூடாது.
-
Aug 05, 2025 16:28 IST
உதகைக்கு வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு
உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையில் முகாமிட்டுள்ளனர். வால்பாறையில் ஏற்கெனவே ஒரு குழுவினர் உதகையில் முகாமிட்டுள்ள நிலையில், மற்றொரு குழு இன்று உதகைக்கு வருகை தந்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.
-
Aug 05, 2025 16:10 IST
கவின் படுகொலை - சுர்ஜித் தாய்க்கு சம்மன்
கவின் படுகொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் பெற்று தகனம் செய்தனர். கவினின் பெற்றோரை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், கவினை படுகொலை வழக்கில்,ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் சிபிஐஐடி அலுவலகத்தில் ஆஜராக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
Aug 05, 2025 15:40 IST
மதுரை ஆதீனம் உயர்நீதிமன்றத்தில் மனு
மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Aug 05, 2025 13:28 IST
8 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை வழக்கு, சிபிசிஐடி 8 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. "விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை, ஆணவ படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்து உள்ளது" என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
Aug 05, 2025 13:06 IST
சூடான ரசத்தில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவில் சூடான ரசத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. அதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Aug 05, 2025 13:01 IST
திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு - 5 காவலர்களும் ஆஜர்
திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு இன்று மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை. 5 காவலர்களும் ஆஜராகியுள்ளார்.
-
Aug 05, 2025 13:00 IST
கன்னியாகுமரியில் கடும் கடல் சீற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடலோரப் பகுதிகளில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. லெமூர் பீச் பகுதியில், மக்கள் அமரும் இடங்கள் மற்றும் தென்னை மர தோட்டத்துக்குள் கடல் நீர் புகுந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Aug 05, 2025 12:56 IST
ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியம் இல்லை. சிபிசிஐடி 8 வாரத்தில் இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
-
Aug 05, 2025 12:46 IST
தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் பாஜகவின் வாக்குகள்: சீமான்
தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். பெருந்துறை, கோவை தெற்கில் வட இந்தியர்கள் வாக்களித்தால் வெற்றி என்ற நிலை உள்ளது தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது; வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தரக்கூடாது; நான் இருக்கும் வரை அது நடக்காது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
Aug 05, 2025 12:27 IST
திருவள்ளூர்: சாலை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயில் இடிப்பு
திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் புதுவாயல் -சின்னக்காவனம் வரை இரு வழிப்பாதை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.2 இயந்திரங்கள் உதவியுடன் கோயிலை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மாற்று இடத்தில் கோயிலை கட்ட இழப்பீடு வழங்கிய பின்பே பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
-
Aug 05, 2025 12:04 IST
கடலூரில் தண்டவாளத்தில் நின்றபடி மக்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தண்டவாளத்தில் நின்றபடி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கியனூர் 73-வது ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இலங்கியனூர் பிஞ்சனூர், வலசை உள்ளிட்ட கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Aug 05, 2025 11:49 IST
மேட்டூர் அணை நீர் மட்டம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 10,175 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் மட்டம் 119.42 அடியாகவும், நீர் இருப்பு 92.550 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
Aug 05, 2025 11:24 IST
லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம்
கன்னியாகுமரி - லெமூர் கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Aug 05, 2025 10:29 IST
தொலைபேசி, சிசிடிவியை ஹேக்: விழுப்புரம் டி.எஸ்.பியிடம் ராமதாஸ் உதவியாளர் புகார்
பாமக நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி, சிசிடிவியை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் ராமதாஸின் நேர்முக உதவியாளர் புகார் அளித்துள்ளார்.
-
Aug 05, 2025 09:41 IST
முகிலன் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்
திருப்பத்தூர் மாணவர் முகிலன் உயிரிழந்த விவகாரம் - சம்பந்தப்பட்ட பள்ளிக்கு
2வது நாளாக விடுமுறை, பள்ளியை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த முகிலனின் உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். -
Aug 05, 2025 09:29 IST
திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு - 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.