/indian-express-tamil/media/media_files/wWavDfu9rNGHPqIkGyoY.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 10, 2025 20:57 IST
யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள் - மாடுக்ள் மாநாட்டில் சீமான் பேச்சு
மேய்ச்சல் நிலங்களை மீட்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் மாடுகள் மாநாட்டில், ஆடு, மாடுகள் முன்பு உற்சாகமாக பேசிய சீமான், “ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
-
Jul 10, 2025 20:39 IST
மேய்ச்சல் நிலங்களை மீட்கக் கோரி நா.த.க மாடுகள் மாநாடு - சீமான் உற்சாக உரை
மேய்ச்சல் நிலங்களை மீட்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் மாடுகள் மாநாட்டில், ஆடு, மாடுகள் முன்பு உற்சாகமாக சீமான் உரையாற்றுகிறார். “கால்நடைத்துறை, பால்வளத்துறை என பல துறைகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. மலைகளை வெடி வைத்து தகர்க்கும் போது ஏற்படாத பாதிப்பு, மாடு மேய்வதால் ஏற்படுமா? பழங்குடி மக்களால் தான் காடுகள் பாதுகாக்கப்படுகிறது. ஆடு, மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம்” என்று பேசினார்.
-
Jul 10, 2025 18:53 IST
பௌர்ணமி தினம் - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடல் மற்றும் நாழி கிணறு ஆகிய புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை நேரம் நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 10, 2025 18:45 IST
அறநிலையத் துறையின் நிதி மாணவர்களுக்கு கிடைக்காது: இபிஎஸ்
அறநிலையத் துறையின் நிதியில் கல்லூரிகள் கட்டப்படுவதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதாகக் திமுகவினர் விமர்சித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அறநிலையத் துறையில் இருந்து நிதி தரவேண்டாம் என்று கூறவில்லை. அவ்வாறு செய்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினேன். அறநிலையத் துறையின் நிதியின் மூலம் கல்லூரிகள் அமைக்கப்பட்டால், மாணவர்களுக்கு உரிய முழு நிதியும் கிடைக்காது என்பதை திரித்து, அதன்மேல் கண், காது, மூக்கு வைத்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், 4 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. 41 உறுப்புக் கல்லூரியாக இருந்தவற்றை, அரசுக் கல்லூரிகளாக மாற்றியது அதிமுக ஆட்சியில்தான். முதுநிலை பட்டப்படிப்புக்கான வகுப்புகளைத் தொடங்காவிட்டால், சி.வி. சண்முகம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
-
Jul 10, 2025 18:13 IST
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையைக் கண்டித்து வருகிற ஜூலை 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை நகராட்சி அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
-
Jul 10, 2025 18:10 IST
ராணிப்பேட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை - மேல்விஷாரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
-
Jul 10, 2025 17:29 IST
பொள்ளாச்சி அருகே ஆம்புலன்ஸிலேயே பிறந்த இரட்டைக் குழந்தை
பொள்ளாச்சி அருகே பிரசவ வலி ஏற்பட்டு அழைத்துச் செல்லும்போது, மாற்றுத்திறனாளி பெண் சரண்யா குமாரிக்கு 108 ஆம்புலன்ஸிலேயே இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதுரியமாகச் செயல்பட்ட ஓட்டுநர் இளைய பாரதி மற்றும் மருத்துவ உதவியாளர் துர்கா தேவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
-
Jul 10, 2025 17:15 IST
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி, சிப்காட் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயகொடி மகன் வேல்மணி (வயது 40) மற்றும் சதாசிவம் மகன் பாரதிகுமார்(27) ஆகிய 2 பேரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் ராஜ்குமார் குற்றவாளிகளான வேல்மணி மற்றும் பாரதிகுமார் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
-
Jul 10, 2025 17:11 IST
திருவாரூர் சமூகநீதி விடுதியில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். இதன்பின்னர் திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவ, மாணவியர்களின் விடுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
-
Jul 10, 2025 16:48 IST
ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை - மேல்விஷாரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் கைது
-
Jul 10, 2025 16:18 IST
வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு
அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1597 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3937 கன அடியாகவும் உள்ளது
-
Jul 10, 2025 16:13 IST
கடலூர் ரயில் விபத்து: 11 பேர் நேரில் ஆஜர்
கடலூர் ரயில் விபத்து - செம்மங்குப்பம் கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்ட விவகாரத்தில், வேன் ஓட்டுநர், கேட் கீப்பர் ஆகிய இருவரைத் தவிர 11 பேர் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேரில் ஆஜர்
-
Jul 10, 2025 15:58 IST
இலங்கையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தஞ்சம் கோரி, இந்தியா வருகை
ராமேஸ்வரம் அருகே நான்காம் மணல் தீடை தீவில் இருந்த கியோசன் என்பவரை கடலோரக் காவல் படையினர் பிடித்து தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Jul 10, 2025 14:51 IST
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் - சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்
பா.ம.க தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய தமிழக அரசு, அதை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த முறைகேடு தொடரபாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மதுரை மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில் தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது.
திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு, பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகரக் காவல்துறை விசாரித்தால் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 10, 2025 14:46 IST
தமன்னாவிற்கு உற்சாக வரவேற்பு
தனியார் கல்லூரி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்துள்ள நடிகை தமன்னாவிற்கு கோவை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
-
Jul 10, 2025 14:41 IST
முத்துராமலிங்கம் சொத்துக்கள் - வாரிசுகளிடம் ஒப்படைக்க மனு
சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம், கோயில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் படி, தேவரின் நேரடி வாரிசுகளான 8 பேரிடம் ஒப்படைக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 13:25 IST
எனது பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்
எனது பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் இனிஷியலை வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள் என கும்பகோணம் மாவட்ட பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். எனது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு ராமதாஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Jul 10, 2025 12:56 IST
கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!
கல்லூரி வளாகத்தில் சாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மீறினால் காவல்துறை, கல்வித்துறை தரப்பில் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். சாதி, மதம் என அனுமதிக்கப்படாத நிகழ்வில் மாணவர்களை எந்த கல்லூரியில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது.
-
Jul 10, 2025 12:22 IST
பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடிக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பழனியில் அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களை மயக்கத்தில் சென்று திறந்து வைத்தாரா எடப்பாடி பழனிசாமி..? படிப்பு என்றால் எடப்பாடிக்கு ஏன் இவ்வளவு கசக்கிறது..? பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார் என முதல்வர் கூறினார்.
-
Jul 10, 2025 12:21 IST
அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜூப்ளி மார்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்ட மாணவர்க்ள் பயன்பெற நன்னிலம் வட்டத்தில் ரூ.56 கோடி செலவில் மாதிரி பள்ளி அமைக்கப்படும். மன்னார்குடி நகராட்சியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
-
Jul 10, 2025 12:19 IST
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை டிஆர்பி ராஜாவை வைத்து சொல்லலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவாரூர் என்றாலே எல்லோருக்கும் திருவாரூர் தேர், கலைஞர் மட்டுமே நினைவுக்கு வரும் என திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். இன்று எங்கும் நிறைந்து நமக்கு எல்லாம் வழிகாட்டுகிறார் கலைஞர். தமிழ்நாட்டை 5 முறை ஆண்ட ஆரூர்காரர் கலைஞர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் சிறப்பான பணிகளால் தமிழ்நாடு தொழில்துறை சிறப்பாக உயர்ந்து இருக்கிறது.
-
Jul 10, 2025 12:18 IST
திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும். திருவாரூர்ல் 4 ஆண்டுகளில் 241 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 58,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2976 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
Jul 10, 2025 12:18 IST
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
-
Jul 10, 2025 11:58 IST
கோவை குண்டு வெடிப்பு வழக்கு: முக்கிய நபர் கைது
இதன்படி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா (எ) சாதிக் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஷ்காரில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
-
Jul 10, 2025 11:22 IST
சிலிண்டர் விபத்தில் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களுக்கு தலா ரூ.10,000
திருப்பூர் கல்லூரி சாலைப் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து தகரக் கொட்டகை வீடுகள் தரை மட்டமான நிலையில், பாதிப்படைந்த 26 குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 தொகையை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் வழங்கினார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்கள் தற்போது தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் குடியிருப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 11:21 IST
காரைக்கால் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் வழிபாடு
காரைக்கால் அம்மையார், அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. வீதியின் இருபுறமும் மக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசி வழிபட்டவண்ணம் உள்ளனர். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்கிறார்கள். மாங்கனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 11:18 IST
திருவாரூரில் வீடு வீடாக சென்று ஸ்டாலின் பிரசாரம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக திருவாரூருக்கு மு.க.ஸ்டாலின் நேற்று சென்றார். மாலை 6 மணி அளவில் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து மாலை 6.20 மணி அளவில் 'ரோடு ஷோ'வை தொடங்கிய ஸ்டாலின், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரயில்வே ரவுண்டானா வரை 6 கி.மீ. தூரம் ரோடு ஷோ மூலம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா? என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
-
Jul 10, 2025 10:58 IST
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து - விசாரணை தீவிரம்
கடலூர் அருகே லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து சம்பவத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், இக்குழுவினர் இன்று ரயிலின் ஓட்டுநர், ரயில் நிலைய மேலாளர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 10, 2025 10:55 IST
திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல் நீர்
திருச்செந்தூரில் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு உள்வாங்கியுள்ளது. இதனால் பாசி படர்ந்த பச்சை நிற பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
Jul 10, 2025 10:34 IST
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை சிபிசிஐடி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
Jul 10, 2025 10:27 IST
3 சுங்கச் சாவடியிலும் அரசுப் பேருந்து செல்ல அனுமதி
தென்மாவட்டத்தில் 3 சுங்கச் சாவடிகளிலும் இன்று ஒருநாள் அரசுப் பேருந்துகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன்கருதி ஓட்டுநர்களிடம் கையெழுத்து பெற்று அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கப்பலூர், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து செல்ல ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
Jul 10, 2025 10:26 IST
அருப்புக்கோட்டை அருகே கோர விபத்து: 3 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் 2 ஓட்டுநர்களும், ஒரு உதவியாளரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 10, 2025 10:13 IST
கிருஷ்ணகிரி: நாய் கடித்து எம்.பி.ஏ பட்டதாரி உயிரிழப்பு
ஒசூர் அருகே தளி அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சைப்பெற்று வந்த எம்.பி.ஏ பட்டதாரி எட்வின் உயிரிழந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வினை நாய் கடித்த நிலையில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாததால் ரேபிஸ் நோய் தொற்று என தகவல் வெளியாகி உள்ளது. நாய் கடியால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஓசூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Jul 10, 2025 10:08 IST
மேட்டூர் அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 42,000 கன அடியில் இருந்து 36,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 08:11 IST
நாய் கடித்து எம்பிஏ பட்டதாரி உயிரிழப்பு
ஓசூர், குப்பட்டி அருகே நாய் கடித்து எட்வின் பிரியன் என்ற இளைஞர் உயிரிழப்பு கடந்த சில நாட்களுக்கு முன் எட்வின் பிரியனை நாய் கடித்த நிலையில், உரிய சிகிச்சை எடுக்காததால் ரேபிஸ் பாதித்து உயிரிழப்பு
-
Jul 10, 2025 07:48 IST
கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பலி மரணமடைந்தனர். அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழி சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதியது.இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.