/indian-express-tamil/media/media_files/2024/12/20/DnQzsUset18JIVRs8uvj.jpg)
சிவகங்கையில் ஸ்டாலின் கள ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வில் ஈடுபட உள்ளார். மாநில அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று அடைகிறதா என்பதை அறிய ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
-
Jan 21, 2025 19:30 IST
வங்கி கொள்ளை - குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு
மங்களூர் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் நெல்லையில் பதுங்கி இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசாரை தாக்கிவிட்டு குற்றவாளி தப்ப முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி தாக்கியதில் 3 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
-
Jan 21, 2025 19:28 IST
மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் - நன்றி தெரிவித்த கருணாஸ்
மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சருக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். ரூ.1 கோடியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
“தமிழினத்தின் வீரமரபின் அடையாளம், மண் விடுதலைக்கான முதல் முகவரி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 22.01.2025 புதன் அன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், ரூ.50 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைக்கிறார்.
சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்து நன்றியை நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்” என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
-
Jan 21, 2025 19:06 IST
நெல்லையில் ஸ்டாலின் கள ஆய்வு எப்போது?
நெல்லை மாவட்டத்தில் பிப்.6, 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ரூ.6,187.46 கோடியில் புதிய திட்டங்களையும் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். ரூ.4,000 கோடியில் டாடா சோலார் உற்பத்தி நிலையத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
-
Jan 21, 2025 18:51 IST
குற்றாலத்தில் தற்காலிக கடைகள் - மதுரை ஐகோர்ட் போலீசுக்கு உத்தரவு
குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றால அருவிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தரக் கோரிய வழக்கில் தென்காசி மாவட்ட எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிடுள்ளார்.
-
Jan 21, 2025 18:16 IST
டங்ஸ்டன் விவகாரம் - பா.ஜ.க-வுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் அமைவதை எதிர்த்து விவசாயிகள் 65 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பாஜக சார்பில் ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை டெல்லி அழைத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 4 பேரும், விவசாய சங்க பிரதிநிதிகள் 7 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், டெல்லி சென்ற குழுவினர் டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை என்று அரிட்டாபட்டி விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் யாரை அழைத்து சென்றாலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தால் மகிழ்ச்சி தான் என்றும், இல்லாவிட்டால் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
Jan 21, 2025 17:27 IST
வருண்குமார் வழக்கு: சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 21, 2025 16:52 IST
கார் உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கம் சிப்காட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ. 941 கோடி மதிப்பில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 9,000 கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jan 21, 2025 16:35 IST
7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்
நெல்லை மாவட்ட நீதிமன்றம் அருகே கொலை செய்த விவகாரத்தில், 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முருகன், மனோராஜ், முத்துகிருஷ்ணன், கண்ணன், ராமகிருஷ்ணன், பார்வதி கண்ணன் மற்றும் தங்கமகேஷ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
-
Jan 21, 2025 16:09 IST
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பள்ளியில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
-
Jan 21, 2025 15:55 IST
கோவையில் சரிந்த வீடுகள் - புதிய வீடுகள் வழங்க முடிவு
கோவையில் சங்கனூர் ஓடைக்குள் வீடுகள் சரிந்து விழுந்த விவகாரத்தில், வீட்டை இழந்த 3 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்
-
Jan 21, 2025 15:51 IST
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ராஜகோபாலப்பேரி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, பட்டா மாறுதலுக்கு ரூ.4800 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்
-
Jan 21, 2025 15:33 IST
திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வந்த வருவாய் துறையினரை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
-
Jan 21, 2025 15:06 IST
பல்கலைக்கழகங்கள் மாநில அரசிடம் இருக்க வேண்டும்- ஸ்டாலின்
பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசிடம் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என காரைக்குடி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Jan 21, 2025 13:57 IST
வள்ளுவரை களவாட ஒரு கூட்டமே உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வள்ளுவர், வள்ளலார் உள்ளிட்டோரை களவாட ஒரு கூட்டமே உள்ளது, மண்ணில் சமத்துவத்தை பேசியோரை களவாட ஒரு கூட்டமே சாதி செய்கிறது. திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல் பாத்துக்கொள்ள வேண்டும். களவாட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராக காவல் அரணாக தமிழர்கள் இருக்க வேண்டும் என்று அழகப்பா பல்கலை. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Jan 21, 2025 13:37 IST
தாயார் பெயரில் பிரமாண்ட நூலகத்தை ப.சிதம்பரம் அமைத்துள்ளார்.
நூலகம் திறப்பு விழாவில் நாதழுதழுக்க பேசியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காரைக்குடி பல்கலைக்கழக வளாகத்தில் ₹12 கோடி சொந்த நிதியில் தன்னுடைய தாயார் பெயரில் பிரமாண்ட நூலகத்தை அவர் அமைத்துள்ளார். "இளம் வயதில் என்னை தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை படிக்கத் தூண்டியவர் என் தாயார்.." என்று கூறி உருக்கமாக பேசியுள்ளார்.
-
Jan 21, 2025 12:53 IST
தமிழகம் முழுவதும் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகையை உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றார். உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம்.
-
Jan 21, 2025 12:46 IST
வளர் தமிழ் நூலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்
சிவகங்கை - காரைக்குடி அழகப்பா பல்கலை. கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட 'வளர் தமிழ்' நூலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ. 12 கோடியில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.
-
Jan 21, 2025 12:44 IST
ஈரோடு கிழக்கு - பிப் 5 அரசு விடுமுறை.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
Jan 21, 2025 12:37 IST
திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் முன்பு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
-
Jan 21, 2025 12:33 IST
பாலியல் தொல்லை - அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
திருப்பூர்: அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிவகுமார்(௫௪) போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கு புகார் தெரிவித்ததையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
Jan 21, 2025 11:42 IST
கிஷன் ரெட்டியுடன் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் குழு சந்திப்பு
மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் குழு நாளை (ஜன.22) சந்திக்க உள்ளனர். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து குறித்த அதிகாரபபூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
-
Jan 21, 2025 10:49 IST
4 மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரியில் ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
4 மாவட்டத்தைச் சேர்ந்த கனிம வளத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் சோதனையில் ஈடுபட்டுள்னர். திருச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
Jan 21, 2025 10:47 IST
சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் திமுகவில் இணைந்தார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார் செந்தில் முருகன்
-
Jan 21, 2025 09:56 IST
மருந்து உற்பத்தி தொழில் கூடத்தில் தீ விபத்து
விசாகப்பட்டினத்தில் உள்ள பார்மா சிட்டி வளாகத்தில் அமைந்திருக்கும் தனியார் மருந்து உற்பத்தி தொழில் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
Jan 21, 2025 09:54 IST
கல்குவாரி விவகாரம்
புதுக்கோட்டையில் கல்குவாரி முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பந்தப்பட்ட கல் குவாரியில் கனிம வளத்துறை, வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.
-
Jan 21, 2025 09:54 IST
மண் அரிப்பால் சரிந்து விழுந்த வீடு
கோவையில் நொடிப்பொழுதில் சரிந்து விழுந்த இரண்டு மாடி கட்டடம் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் கே.அர்ஜுனன் நேரில் ஆய்வு. அதிகளவு மண் தோண்டப்பட்டதால் தான் விபத்து என மக்கள் குற்றச்சாட்டு மாநகராட்சி ஆணையரை போனில் தொடர்பு கொண்டு பேசிய எம்.எல்.ஏ. உயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் யார் பதில் சொல்வது என கடிந்து கொண்ட எம்.எல்.ஏ.
-
Jan 21, 2025 09:53 IST
ஜல்லிக்கட்டில் சாதிய தீண்டாமை என புகார்
பாலமேடு ஜல்லிக்கட்டில் பட்டியலினத்தவர் காளைகள் புறக்கணிக்கப்பட்டதாக அம்பேத்கர் பறையர் உறவினர் முறை தலைவர் சந்தானம் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தங்கள் சமூகத்தவர்களின் கோயில் காளைகளுக்கு மரியாதை அளிக்கவில்லை எனவும் பட்டியலின் சமூகத்தினரின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.