/indian-express-tamil/media/media_files/2025/02/04/HZSvBLaTKokLG1rVKUoH.jpg)
மதுரையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்:
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினர் போராட்டம் அறிவித்த நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
Feb 04, 2025 21:35 IST
தனி பட்டா வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது
நிலத்தை அளவீடு செய்து தனி பட்டா வழங்க ₹5000 லஞ்சம் பெற்ற நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் மற்றும் அணியார் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வி.ஏ.ஓ. வேலுச்சாமி வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர். சர்வேயர் அசோக் குமார் கூறியபடியே பணம் வாங்கினேன் என வாக்குமூலம் அளிக்க, அலுவலகம் சென்று அசோக் குமாரும் கைது செய்யப்பட்டார்
-
Feb 04, 2025 21:33 IST
நீலகிரி பேருந்து பயணியிடம் பிளாஸ்டிக் இருந்தால் பேருந்து பறிமுதல் செய்ய உத்தரவு
"நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும். பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Feb 04, 2025 20:50 IST
வால்பாறையில் யானை தாக்கி வெளிநாட்டு பயணி படுகாயம்
கோவை: வால்பாறை அருகே டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் காட்டு யானை தாக்கி, வெளிநாட்டு சுற்றுலா பயணி பலத்த காயமடைந்தார். பொள்ளாச்சியில் இருந்து பைக்கில் சென்ற அவரை காட்டு யானை தாக்கியுள்ளது. பொதுமக்கள் அவரை மீட்டு எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி கொண்டு செல்லப்படுகிறார். காயமடைந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் (60) என விசாரணையில் தெரியவந்துள்ளது
-
Feb 04, 2025 20:43 IST
பெண் வி.ஏ.ஓ. மீது சாணி அடித்ததாக புகார்: பெண் உதவியாளர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தில் பெண் வி.ஏ.ஓ. மீது சாணி அடித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், ஏற்கனவே பணியிடை நீக்கத்தில் உள்ள கிராம உதவியாளர் சங்கீதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 18 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 04, 2025 18:52 IST
காணாமல் போன சிறுமியின் சடலம் மீட்பு
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே 15 வயது பள்ளிச் சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த நிலையில், காலிங்கராயன் கால்வாயில் சிறுமியின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. கால்வாயில் குதித்து மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Feb 04, 2025 18:48 IST
மாத்திரைகள் மூலம் போதை ஊசி - 4 பேர் கைது
கடலூர் மாவட்டம் வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், சல்மான் கான், வினோத் குமார், கலைவாணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10-க்கு வாங்கப்படும் மாத்திரையை 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்படுள்ளது.
-
Feb 04, 2025 18:47 IST
இன்றைய முட்டை விலை
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 20 காசுகள் சரிந்து, ரூ. 4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.
-
Feb 04, 2025 18:37 IST
பரமக்குடி பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிர்வாக ரீதியிலான பிரச்னையில் பரமக்குடி பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வி.ஏ.ஓ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தார் சாந்தி மற்றும் அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியர்களை வி.ஏ.ஓ. யூனுஸ் ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
-
Feb 04, 2025 18:06 IST
நெல்லை விவசாயி கொலை வழக்கு - தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
நெல்லை விவசாயி கொலை வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ல் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் கொலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையில் மாரியப்பன், லண்டன் துரை (25), சுடலைமணிக்கு (26) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-
Feb 04, 2025 17:32 IST
குடோனில் பயங்கர தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சி பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆயில் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
-
Feb 04, 2025 15:56 IST
திருப்பரங்குன்றம் கோயில் முன் தடையை மீறி இந்து அமைப்பினர் போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முன் தடையை மீறி இந்து அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Feb 04, 2025 15:32 IST
மதுரை பங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட் அனுமதி
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை நிராகரித்ததை எதிர்த்து மதுரை மதுரை மாவட்ட இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
-
Feb 04, 2025 14:40 IST
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, வாணியம்பாடியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்
-
Feb 04, 2025 13:56 IST
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல புறப்பட்ட ஹெச்.ராஜா கைது
திருப்பரங்குன்றம் போராட்டத்திற்கு செல்ல புறப்பட்ட பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது போலீஸ் அனைவரும் ’ஆன்ட்டி ஹிந்து’ என ஹெச்.ராஜா கூறினார்
-
Feb 04, 2025 13:54 IST
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; எப்போது போராட்டம் நடத்த அனுமதி வழங்குவீர்கள்? காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக எப்போது போராட்டம் நடத்த அனுமதி வழங்குவீர்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காவல்துறைக்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. எப்போது எங்கு போராட்டம் நடத்தலாம் என்பதை கேட்டு நீதிமன்றத்தில் சொல்லவும் என அரசு வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 04, 2025 13:52 IST
திருப்பரங்குன்றத்திற்கு காவடி உடன் செல்ல முயன்ற முன்னாள் மேயர் கைது
திருப்பரங்குன்றத்திற்கு காவடி உடன் செல்ல முயன்ற நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
-
Feb 04, 2025 13:51 IST
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் பக்தர் போல் நுழைந்து போராடியவர்கள் கைது
திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் இந்து முன்னணி மகளிர் அமைப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். பக்தர் போல் நுழைந்து போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கம் இந்து அமைப்புகளுக்கு ஆதரவாக பக்தர்கள் போல கோவிலுக்குள் சென்று பா.ஜ.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
-
Feb 04, 2025 13:44 IST
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் போராட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முருகன் மலையை மீட்போம் என முழக்கமிட்டு கோயில் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
-
Feb 04, 2025 12:43 IST
மழையால் நெல் பாதிப்பு - விவசாயி தற்கொலை
திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே மழையால் நெற்பயிர் பாதிப்பால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. உப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் 1.5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். மழையால் நெற் பயிர்கள் சரியாக விளையாத நிலையில் முனியப்பன் தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Feb 04, 2025 12:08 IST
இந்து முன்னணி மாநிலத் தலைவர் திருப்பூரில் கைது
திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். காடேஸ்வரா சுப்பிரமணியம் வீடு முன்பு காவலர்கள் குவிந்துள்ளன. இந்து முன்னணியினரும் குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
Feb 04, 2025 11:53 IST
மாஞ்சோலை மக்கள் மீது அக்கறையில்லை - புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி
அரிட்டாப்பட்டிக்கு காட்டிய அக்கறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலைக்கு காட்டவில்லை. 9 மாதங்களாக போராடும் மாஞ்சோலை மக்களை பிப் 6,7ஆம் தேதிகளில் முதலமைச்சர் சந்திக்கவுள்ளார். மாஞ்சோலை மக்களை முதலமைச்சர் சந்திப்பது பழைய கணக்கை தீர்க்கவா, புதிய கணக்கை தொடங்கவா? மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 04, 2025 11:45 IST
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - 144 தடை உத்தரவுக்கு எதிராக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு
திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கருதி திருப்பரங்குன்றம் கடைவீதியில் உள்ள சுமார் 200 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
-
Feb 04, 2025 11:23 IST
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் | இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் 8 பேர் கைது!
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என்று இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் எட்டு பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.
-
Feb 04, 2025 11:06 IST
பேருந்தில் பாலியல் தொல்லை: மாற்று ஓட்டுநர் கைது
பெங்களூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நாமக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணா சேகர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறது.
-
Feb 04, 2025 10:03 IST
நகர மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தி.மு.க நகர மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
-
Feb 04, 2025 09:23 IST
போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
மதுரை, திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் அறிவித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.