/indian-express-tamil/media/media_files/3KuQBzbY0dWTRM23aHdP.jpg)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இரவு முதலே தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. கோவையில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
-
Dec 25, 2024 20:50 IST
மதுரை டங்ஸ்டன்: மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? துரைமுருகன் விளக்கம்
மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்த மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். 'டங்ஸ்டன் சுரங்க திட்டம் குறித்த ஏலத்தில் அடிப்படை குறைப்பாடுகள் வெளிப்படையாக உள்ளன. இது சட்டம்- ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் அதனை மாநில அரசு தான் கையாள வேண்டி வரும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி (2023 அக்டோபர் 3) மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும், நாயக்கர்ப்பட்டி டங்ஸ்டன் சுரங்க தொகுதி, அரிட்டப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியது என்ற தகவலை மத்திய சுரங்க அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தவிர, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரின் கடிதத்தில் நில விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, இப்பகுதி உயிரியல் பன்முகத்தன்மை கொண்டது என்பதை நன்கு அறிந்ததே, மத்திய சுரங்க அமைச்சகம் இந்த ஏல அறிவிப்பை மேற்கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 25, 2024 19:09 IST
ரேபிஸ் நோயால் 32 பேர் உயிரிழப்பு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரேபிஸ் நோயால் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் 1,33,523 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Dec 25, 2024 17:57 IST
அதிகாரிகளுடன் த.வெ.க-வினர் வாக்குவாதம்
திருப்பத்தூரில் த.வெ.க கொடிக்கம்பத்தை அகற்ற வந்த அதிகாரிகளுடன் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் கட்சி கொடிக்கம்பத்தை அகற்றினால், அனைத்து கட்சி கொடிக்கம்பத்தையும் அகற்ற வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
-
Dec 25, 2024 15:20 IST
வக்ஃபு வாரியத்தை கண்டித்து போராட்டம்
மதுரையில் வக்ஃபு வாரியத்தை கண்டித்து பள்ளிவாசல் மீது ஏறி போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளிவாசலை, வக்ஃபு வாரியம் கையகப்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
-
Dec 25, 2024 15:04 IST
கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர். அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, கிக் யூ புல்வெளி ஆகியவற்றை கண்டு ரசித்து வருகின்றனர்.
-
Dec 25, 2024 13:31 IST
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை; 3 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைச் செய்துவந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரோக்கியசாமி (50), சுரேஷ் (42), ரூபன் (45) ஆகிய 3 பேரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
-
Dec 25, 2024 13:29 IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.71 லட்சம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் மற்றும் உப கோவில்களில் உண்டியல்களில் ரூ.71.82 லட்சம் ரொக்கம், 1.395 கிலோ தங்கம், 2.710 கிலோ வெள்ளியைக் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்
-
Dec 25, 2024 13:27 IST
அ.தி.மு.க ஐ.டி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்
அ.தி.மு.க ஐ.டி விங் தலைவராக கோவை சத்யனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஐ.டி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Dec 25, 2024 12:40 IST
12 மணி நேரமாக பயணிகள் காத்திருப்பு
திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லக்கூடிய விமானத்தில் நேற்று நள்ளிரவு கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோளாறு இன்னும் சரி செய்யப்படாததால் பயணிகள் 12 மணி நேரமாக காத்திருக்கின்றனர்.
-
Dec 25, 2024 12:15 IST
10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு 94 மூட்டைகளில் குட்காவை கடத்தி வந்த லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் மதிப்பு 10 லட்சம் ஆகும். கண்டெய்னர் லாரியில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான குக்கா பொருட்கள் சிக்கியது.
-
Dec 25, 2024 11:21 IST
குக்கர் வெடித்து பெண் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே வ.உ.சி. நகரில் உள்ள வீடு ஒன்றில் குக்கர் வெடித்து, பெண் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருசாமி என்பவரின் மனைவி சாந்தி (45) இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து கொண்டிருந்த போது, குக்கர் திடீரென வெடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த சாந்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
-
Dec 25, 2024 11:18 IST
120 வீடியோக்கள் சிக்கியதாக தகவல்
ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் 120 வீடியோக்கள் சிக்கியதாக தகவல். கேமரா பொருத்தப்பட்ட கடை வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும் கைதானவர் ஒப்பந்தம் எடுத்து கடை நடத்தியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
-
Dec 25, 2024 11:17 IST
திருச்சியில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் திடீர் கோளாறு
திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானத்தில் இருந்த 150 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
-
Dec 25, 2024 09:30 IST
நீலகிரியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
நீலகிரி: குன்னூர் பகுதியில் வாகனங்கள் மீது பனிக்கட்டிகளாக படிந்த உறைபனி. நேற்றிரவு உதகையின் சில பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
-
Dec 25, 2024 09:21 IST
குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சூரிய உதயத்தை கண்டு ரசித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.