பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 26, 2024 18:51 ISTதிருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்
குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் 30 முதல் ஜன. 1 வரை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. ரூ.37 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் திறந்துவைக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3 நாட்கள் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
Dec 26, 2024 18:05 ISTரயில் கழிவறையில் கண்டெடுத்த குழந்தையை தங்களிடமே ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி
ரயில் கழிவறையில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை தங்களிடமே ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தம்பதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும் குழந்தையை வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். 2022ம் ஆண்டு நெல்லை - ஈரோடு ரயிலின் கழிவறையில் ரவி - சாவித்ரி தம்பதி, கண்டெடுத்த பெண் குழந்தையை அவர்கள் வளர்த்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் குழந்தைகள் நலக்குழுவினரால் ஒப்படைக்கப்பட்டது
-
Dec 26, 2024 17:54 ISTஉதகை அருகே சாலையை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்
உதகை அருகே உள்ள ஆனைக்கட்டி, சிறியூர் ஆகிய பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலையின் அகலத்தைக் குறைக்கக் கூடாது என சாலை அமைக்கும் பணியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். புலிகள் காப்பக பகுதி என்பதால் 3.75 மீட்டர் அகலமாக இருந்த சாலையானது 2.80 மீட்டர் அகலமாக குறைக்கப்பட்டது. தற்போது ரூ.14 கோடி செலவில் 21 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. ஆனால், 3.75 மீட்டர் அகலத்திலேயே சாலையை அமைக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதி மக்கள், பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
-
Dec 26, 2024 17:52 ISTசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி வனப்பகுதியில் இருக்கும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மார்கழி அமாவாசையை ஒட்டி வரும் 28ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது
-
Dec 26, 2024 17:50 ISTசிதம்பரம் அருகே 9 அடி நீள முதலை பத்திரமாக மீட்பு
சிதம்பரம் அருகே சாலியந்தோப்பு கிராமத்தில் ஏரியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு வந்த 9 அடி நீளம், 250 கிலோ முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். முதலையை எடுத்துச் சென்று வக்காரமாரி ஏரியில் விட்டனர்
-
Dec 26, 2024 17:18 ISTசபரிமலை கோயில் நடை அடைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி துவங்கிய மண்டல காலம் நிறைவு பெற்றுள்ளது. இன்று இரவு 1 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
-
Dec 26, 2024 16:10 ISTநீலகிரி: வனத்துறை அனுமதி கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி
கூடலூரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வன உரிமை சட்டத்தின் கீழ் சாலை வசதியை முதல் முறையாக பெற்றுள்ள பழங்குடியின கிராம மக்கள் - சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றதால் மகிழ்ச்சி. வனத்துறையினரும் சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்றை வழங்கி இருக்கிறார்கள். அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி காரணமாக 80 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வந்த பழங்குடியின மக்களுக்கு தற்பொழுது சாலை வசதி கிடைக்கப்பெற்றுள்ளது. சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள், பேரூராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பழங்குடியின மக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
-
Dec 26, 2024 15:49 IST"பாலியல் பிரச்சினை - அரசு மட்டுமே முடிவு கட்ட முடியாது"
"கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு அரசு மட்டுமே முடிவு கட்ட முடியாது.பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை முறையாக கண்காணிக்க வேண்டும்" - மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து மதுரை ஆதீனம் கருத்து
-
Dec 26, 2024 15:45 ISTவிபத்தில் உயிரிழந்த ஆசை மகன்.. கனத்த இதயத்துடன் பெற்றோர் எடுத்த முடிவு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் 22 வயது சஞ்சய் மென்பொருள் பொறியாளராக மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். புதிய இருசக்கரம் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள ஷோரூமில் இருந்து இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் எடுத்துச் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சஞ்சய்க்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், மகனின் இதயம் கிட்னி உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளையும் சஞ்சயின் பெற்றோர் தானம் செய்தனர். சஞ்சய்யின் உடல் சொந்த ஊரான மேலக்கிடாரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
-
Dec 26, 2024 14:22 IST"டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை தடுக்க எந்த எல்லைக்கும் போவோம்"
தமிழ்நாட்டில் ஒரு சென்ட் விவசாய நிலத்தை கூட எந்த அரசும் கையகப்படுத்த கூடாது; டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை தடுக்க எந்த எல்லைக்கும் போவோம்-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை சந்தித்த பாமக தலைவர் அன்பும் இ ராமதாஸ் பேச்சு.
-
Dec 26, 2024 13:55 ISTதிண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு பெண் பலி
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர், கோபிகா ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த NGO-காலனியை சேர்ந்த ராஜசேகர் மனைவி பாலபவித்ரா(29) என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்படி, சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் உயிரிழந்த ராஜசேகரின் மனைவி மற்றும் கோபிகாவின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீ விபத்தில் இறந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
-
Dec 26, 2024 13:40 ISTதிருச்சி, மதுரையில் டைடல் பார்க்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
திருச்சி, மதுரையில் டைடல் பார்க் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 40,000 சதுர அடியில் ரூ.289 கோடியில் 12 தளங்களுடன் டைடல் பார்க் அமைய உள்ளது. மதுரையில் அமைய உள்ள டைடல் பார்க் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 57,000 சதுர அடியில் ரூ.415 கோடியில் 6 தளங்களுடன் டைடல் பார்க் அமைய உள்ளது.
-
Dec 26, 2024 12:53 ISTஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்ல கண்ணு பெயர் - ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு. பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை; நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன்.
எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களையும் தாண்டி வரும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்துள்ளது. கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மதச்சார்பின்மை கூட்டணி, நிரந்தர கூட்டணி" என்று கூறினார்.
தொடர்ந்து "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்ல கண்ணு பெயர் சூட்டப்படும்" என்று அவர் அறிவித்தார்.
-
Dec 26, 2024 12:10 ISTஅடுத்த மாதம் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் திறப்பு?
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களும் பேசிய கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
-
Dec 26, 2024 12:08 ISTகன்டெய்னா் லாரி மீது உயரழுத்த மின்கம்பி உரசி விபத்து; ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்து சேலம் புறவழிச்சாலை வழியாக நாமக்கல் நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி மீது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் தப்பிய நிலையில், கன்டெய்னருக்குள் இருந்த இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள், டயா்கள் தீப்பிடித்து எரிந்தன.
தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.இதுதொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தால் முசிறி-சேலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி:க.சண்முகவடிவேல்
-
Dec 26, 2024 11:04 ISTசுனாமி நினைவு தினம் - குமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியபுரம், வாவுத்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்களும் செல்லவில்லை. குமரி கடற்கரை கிராமங்களை சுனாமி தாக்கி 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்ததன் 20ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
-
Dec 26, 2024 09:47 ISTநாய் கடித்து 5 ஆண்டுகளில் 32 பேர் மரணம் - மதுரையில் அதிர்ச்சி
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாய்கள் கடித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பகுதிகளில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த என்.ஜி மோகன் என்ற நபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நாய் கடி விவரங்களை ஆர்.டி.ஐ மூலமாக கேட்டுப் பெற்றார். அதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 முதல் 2024 நவம்பர் வரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 523 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.