பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.42 காசுக்கும் விற்பனையாகிறது.
-
Jan 04, 2025 22:11 ISTதிருவிழா ஏற்பாடுகள் - மாவட்ட எஸ்.பி ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆய்வு செய்தார். பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கை, வாகனங்கள் நிறுத்துமிட வசதி குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
-
Jan 04, 2025 19:46 ISTவிருது வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
கோவையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் டான்கேர் மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மதிவேந்தன், மருத்துவத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்
-
Jan 04, 2025 18:35 ISTவிருதுர்நகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் என மேலும் 3 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
-
Jan 04, 2025 18:33 ISTவிருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Jan 04, 2025 17:46 ISTகோவையில், காங்கேயம் ரக நாட்டு மாடுகளுக்கென பிரத்யேக கண்காட்சி!
கோவையில் நடைபெற்ற காங்கேயம் ரக நாட்டு மாடுகளுக்கென பிரத்யேக கண்காட்சியை சிறுவர்கள்கண்டு ரசித்தனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட காங்கேயம், மயிலை, செவலை, காரி காளைகள், கன்று குட்டிகள், ஆடுகள் என பல்வேறு கால்நடைகள் இடம்பெற்றுள்ளன.
-
Jan 04, 2025 16:33 ISTசிறுமி பலி - மருத்துவமனையில் நீதிபதி விசாரணை
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி சிறுமி பலியான சம்பவத்தில் நீதிபதி சத்ய நாராயணா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோரிடம் நீதிபதி 15 நிமிடம் விசாரணை நடத்தினார்
-
Jan 04, 2025 16:18 ISTபுதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட காளைகள்!
நடப்பாண்டில் முதல் ஜல்லிக்கட்டாக புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று காலை துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் இருந்து வெளியேறிய காளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் சேசு என்பவருக்கு சொந்தமான ஒரு காலை உயிருக்கு ஆபத்தான நிலையில் கால்நடைமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு - ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட காளைகள்!#Pudukkottai | #Jallikattu pic.twitter.com/tqZYaTusKm
— Indian Express Tamil (@IeTamil) January 4, 2025 -
Jan 04, 2025 16:14 ISTபள்ளி தாளாளருக்கு நீதிமன்ற காவல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமோனிக் மேரி ஆகியோரை வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jan 04, 2025 16:04 ISTதூத்துக்குடியில் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்!
தூத்துக்குடி, சாயர்புரம் அருகே தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, மண் பானையில் சர்க்கரை பொங்கல் செய்து கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஆண்டு தோறும், ‘ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்’ என்ற பெயரில் வெளிநாட்டினரை வைத்து விழா ஏற்பாடு செய்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 21 இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
Jan 04, 2025 15:48 ISTமாணவர் உயிரை பறித்த பிராங்க்
கோவை தனியார் கல்லூரியில் பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மனம் உடைந்த மாணவர் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சத்யநாராயணா திருப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்பிராங்க் என்ற பெயரில் கிண்டல் செய்து மாணவனை தாக்கிய மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் சத்ய நாராயணா, மிகச் சிறந்தவராகவும் ஒழுக்கமுள்ளவராகவும் இருந்துள்ளார்
-
Jan 04, 2025 14:48 IST"சிறுமி உயிரிழப்புக்கு என்ன காரணம்?''
விக்கிரவாண்டி சிறுமி உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வாய்மொழியாக தகவல். நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தகவல்.
-
Jan 04, 2025 14:35 ISTகுழந்தை உயிரிழப்பு - ஆசிரியைக்கு நீதிமன்றக் காவல்
விக்ரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் எல்கேஜி குழந்தை உயிரிழந்த விவகாரம். வகுப்பு ஆசிரியை ஏஞ்சலை வரும் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.
-
Jan 04, 2025 14:18 ISTபெரியப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்..! சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் தம்பி மகனான பிஎஸ்சி பட்டதாரி செல்வராஜ், கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பெரியசாமி தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென வீட்டிலிருந்த கத்தியால் பெரியப்பாவை செல்வராஜ் வெட்டி கொலை செய்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.
-
Jan 04, 2025 14:00 ISTதாயை கொடூரமாய் கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்
கடையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள அருணாச்சலம் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி, கற்பம் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் வயதுடைய 17 வயதுடைய மூத்த மகனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கற்பகத்தின் தலையில், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் அம்மிக்கல்லை தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பகத்தின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தப்பிச் சென்ற நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
-
Jan 04, 2025 13:37 ISTகந்துவட்டி புகாரில் காசிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
கந்துவட்டி புகாரில் காசிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு.
காசியின் தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறையும், இடைத்தரகருக்கு 3 ஆண்டுகள் சிறையும் விதித்து உத்தரவு. வழக்கின் பொது 35 சாட்சிகள் மற்றும் 88 ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தது சிபிசிஐடி.
-
Jan 04, 2025 13:33 ISTகோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 3 பேர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதன் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமை காவலர் ஸ்டாலின் ஆகியோர் அந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
-
Jan 04, 2025 13:27 ISTபட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து
விருதுநகர் அருகே 6 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து. விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு. பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 பேர் உயிரிழப்பு.
-
Jan 04, 2025 13:07 ISTபட்டாசு ஆலை விபத்து- முதலமைச்சர் நிதியுதவி.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிப்பு. காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு.
-
Jan 04, 2025 12:50 ISTதனியார் பள்ளி தாளாளர் மருத்துவமனையில் அனுமதி
குழந்தை லியா மரணத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தாளாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பள்ளி தாளாளருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது
பள்ளி தாளாளர் எமில்டா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி, பள்ளி முதல்வர் டொமினிக் மேரிக்கும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jan 04, 2025 12:49 ISTதனியார் பள்ளியில் குழந்தைகள் நல குழு ஆய்வு
சிறுமி லியா உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளியில் குழந்தைகள் நல குழு ஆய்வு செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர், தனியார் பள்ளியில் சோதனை. 2 பெண்கள் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருனின்றர்.
பள்ளியில் ஆய்வு முடித்த பின், விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாளுடன் குழந்தைகள் நல குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
Jan 04, 2025 12:09 ISTபட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் வொர்க்ஸில் வெடி விபத்து ஏற்பட்டதில் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலி என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jan 04, 2025 11:14 ISTகுழந்தை உடலை பார்த்து கதறி அழும் உறவினர்கள்
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் பிரேத பரிசோதனை முடிந்து குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டு வாசலில் குழந்தையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. குழந்தை உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Jan 04, 2025 11:12 ISTபட்டாசு ஆலையில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்னர்.
பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின. சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 04, 2025 10:55 ISTபட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 4 ஆலைகள் தரைமட்டமான நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
Jan 04, 2025 10:27 ISTகாசி விஸ்வநாதர் கோயில் வாசலில் தீ வைப்பு
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் வாசலில் தீ வைத்த நபரால் பதற்றம். கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மர்ம நபர் அத்துமீறல் சாரம் கட்டும் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. பற்றி எரிந்த நெருப்பை துரிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்திய கோவில் பணியாளர்கள். மர்ம நபரை பிடித்து தென்காசி காவல்துறை விசாரணை.
-
Jan 04, 2025 10:25 ISTசிறுமி உடல் ஒப்படைப்பு
விக்கிரவாண்டியில், தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தை உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்த நிலையில் பெற்றோர் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
-
Jan 04, 2025 09:53 ISTதடையை மீறி பேரணி - குஷ்பூ மீது வழக்கு
மதுரை மேற்கு கிராம உதவியாளர் ஜலபதி அளித்த புகாரில் தடையை மீறி பேரணி நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் குஷ்பூ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
Jan 04, 2025 09:33 ISTவிக்கிரவாண்டி: குழந்தையின் பிரேத பரிசோதனை தொடக்கம்
விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை தொடங்கியது.
-
Jan 04, 2025 09:32 ISTஆண்கள் மட்டும் பங்கேற்கும் விருந்து
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 1,000 கிலோ கறி மற்றும் 2,500 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா நடைபெற்றது.
-
Jan 04, 2025 09:31 ISTகோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து - ஓட்டுநர் கைது
கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து - ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட மோட்டார் பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.