/indian-express-tamil/media/media_files/2025/08/05/tvk-vijay-2025-08-05-21-38-10.jpg)
அரியலூரில் விஜய் பிரசாரம் - அனுமதி கோரி மனு
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 06, 2025 21:59 IST
அரியலூரில் விஜய் பிரசாரம் - அனுமதி கோரி காவல்துறையிடம் மனு
அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வாகன பரப்புரை நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வாகன பரப்புரை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே திருச்சி பேருந்து நிலையம் முன்பு விஜய் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Sep 06, 2025 21:53 IST
குலசை தசரா: விதவிதமான பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சூரசம்ஹாரம் விழா அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தசரா திருவிழாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக காளி, முருகன் வேடம் மற்றும் பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்களுக்கு மின்விளக்கு வைத்த தலைக்கிரீடங்கள், கண்மலர், கைப்பட்டை, இடுப்புப்பட்டை, சூலாயுதம், ஈட்டி, காது குண்டலம், அனுமான் குண்டலம், தாமரை மலர், வில், வேல், அம்பு மற்றும் 5 முதல் 21 கைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- Sep 06, 2025 19:28 IST
20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர், கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 06, 2025 19:23 IST
கடலூர் சிப்காட் விபத்து - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாசு கட்டுப்பாடு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளியையும் சஸ்பெண்ட் செய்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Sep 06, 2025 18:56 IST
ரூ.7.50 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் கடத்தியவர் கைது
சிதம்பரத்தில் ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பில் அம்பர்கிரீஸ் என்கிற திமிங்கலம் எச்சம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.திமிங்கலம் எச்சம் என்பது திமிங்கலத்தின் செரிமான அமைப்பிலிருந்து உருவாகும் ஒருவகை திடப்பொருள். இது அம்பர் கிரீஸ் என்றழைக்கப்படுகிறது. இது வாசனை திரவியங்கள், மருத்துவப் பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுவதால் அதிக விலை மதிப்புடையதாக உள்ளது.
- Sep 06, 2025 18:10 IST
கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, திட்டங்குளத்தில் உள்ள சாய்ராம் மேட்வின் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால், பணியாளர்கள் அவசரமாக வெளியேறினர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்தன.
- Sep 06, 2025 17:58 IST
மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் தவிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இரண்டு கட்டடங்களில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கேபிளை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இன்று மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
- Sep 06, 2025 17:57 IST
விஜய் பிரச்சாரம்: அனுமதி கோரி கடிதம்
விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அவரது கட்சியினர் அரியலூர் காவல்துறைக்கு அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 06, 2025 16:39 IST
'நிறைகுடம் தளும்பாது'- மோடியை புகழ்ந்த பிரேமலதா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”ஜிஎஸ்டி வரி குறைப்பு விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும். 'நிறைகுடம் தளும்பாது' என்பதைப் போல் பிரதமர் மோடி அமைதியாக அமெரிக்க வரிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்" என்றார்.
- Sep 06, 2025 16:36 IST
டிடிவி தினகரன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "டிடிவி தினகரன் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது" என்று கூறியுள்ளார்
- Sep 06, 2025 15:45 IST
பழனி கோவில் அர்ச்சகர் பயிற்சி அறிவிப்பு
பழனி முருகன் கோவிலில், 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பின்படி, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி, ஓதுவார் பயிற்சிப் பள்ளி, வேதசிவாகம பாடசாலை மற்றும் தவில் இசைப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பழனி கோவில் அலுவலகத்திலும் அல்லது www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
- Sep 06, 2025 15:02 IST
கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு
கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிப்காட்டில் இயங்கிவரும் கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தால் ரசாயனம் வெளியேறி 93 பேர் பாதிக்கப்பட்டனர்.
- Sep 06, 2025 12:50 IST
கொடைக்கானல்: கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. சின்னப்பள்ளம் பகுதிக்கு செல்வதற்கு பதிலாக பாக்கியபுரம் குடியிருப்புப் பகுதிக்கு லாரி சென்றதால் விபத்து ஏற்பட்டது. சாய்வான பகுதியில் நுழைந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
- Sep 06, 2025 12:08 IST
விஜய் உடன் கூட்டணியா? - டி.டி.வி விளக்கம்
"தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாக்கலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜய் தலைமையை ஏன் ஏற்கக்கூடாது? அவர் ஏன் தீண்டத்தகாதவரா? யாரையும், எந்தக் கட்சியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. விஜய்யை குறித்து பேசியதால், அவருடன் கூட்டணி என பேசுவது சரியில்லை" என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
- Sep 06, 2025 11:49 IST
கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? - டி.டி.வி தினகரன் விளக்கம்
"மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் பாஜக கூட்டணியில் இருந்தோம். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. பா.ஜக. கூட்டணியில் இருந்து வெளியேறியது நிதானமாக எடுத்த முடிவு" என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
- Sep 06, 2025 11:34 IST
பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசர முடிவல்ல - மதுரையில் டி.டி.வி தினகரன் பேட்டி
அ.தி.மு.க அணிகளை ஒருங்கிணைக்க அமித்ஷா முயற்சி எடுக்கிறார் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், "அமித்ஷா முயற்சி கைகூடும் என்று காத்திருந்தோம்; அது நடக்கவில்லை. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கும் முயற்சி கைகூடாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அ.ம.மு.க-வை சிறிய கட்சி என பா.ஜ.க நினைத்திருக்கலாம். பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசர முடிவல்ல; நிதானமாக எடுத்த முடிவு. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கவில்லை என்றால் அக்கட்சி ஆட்சிக்கு வருவது கனவாகவே போகும். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தான் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினோம்," என்று தெரிவித்துள்ளார்.
- Sep 06, 2025 10:58 IST
செங்கோட்டையன் கருத்து - இ.பி.எஸ் ஏற்க மறுப்பு
செங்கோட்டையன் பேச்சு குறித்து அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் நடைபெறும் ஆலோசனையில் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் "அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும்" என்ற செங்கோட்டையனின் கருத்தை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 06, 2025 10:30 IST
நகை திருடியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கைது
நகையை திருடிய வழக்கில் திருப்பத்தூர், நரியம்பட்டு ஊராட்சி தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் சென்ற பெண்ணிடம் 4 சவரன் நகை திருடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 06, 2025 10:29 IST
30,800 கன அடியாக நீடிக்கும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30,800 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் கால்வாய்கள் வழியே விநாடிக்கு 30,800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Sep 06, 2025 10:05 IST
செங்கோட்டையன் பேச்சு - திண்டுக்கல்லில் இ.பி.எஸ் ஆலோசனை
செங்கோட்டையன் பேச்சு குறித்து அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் நடைபெறும் ஆலோசனையில் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- Sep 06, 2025 10:01 IST
நெல்லையில் இளைஞர் கொலை - 2 சிறுவர்கள் கைது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெங்கடேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற வெங்கடேஷ்-க்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் வெங்கடேஷை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.