/indian-express-tamil/media/media_files/2025/07/24/eps-campaign-2025-07-24-21-14-13.jpg)
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்” என்று பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: மேட்டூர் அணை நடப்பாண்டில் 6-வது முறையாக 120 அடியை எட்ட உள்ள நிலையில், வருவாய் துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரி பட்டினம், புதுபாலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிப்பது, துணி துவைப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Sep 01, 2025 22:06 IST
எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறக்க தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் இல்லை - இ.பி.எஸ்
மதுரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு, “குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டது.விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியது அ.தி.மு.க அரசு. விவசாயிகளுக்கு 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம், பயிர் இழப்பீடு வழங்கியது அதிமுக அரசாங்கம். எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறக்க தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் இல்லை. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும்” என்று கூறினார்.
- Sep 01, 2025 18:48 IST
வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? - அன்புமணி
தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவது வருத்தமளிக்கிறது. சுவாமி அய்யா வைகுண்டரை ‘the god of hair cutting' என்று குறிப்பிட்டதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
- Sep 01, 2025 17:51 IST
திருத்தணி முருகன் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல 2 நாள் தடை
திருத்தணி முருகன் திருக்கோயில் நிதியில் ரூ.1 கோடி மதிப்பில் மலைப்பாதையில் தார்சாலை புதுப்பிக்கும் பணிகள் இன்று முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு 2 நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து முதியோர் மற்றும் குழந்தைகள் மலைக்கோயிலுக்கு சென்றுவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- Sep 01, 2025 17:10 IST
மேட்டூர்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணை நடப்பாண்டில் 6-வது முறையாக 120 அடியை எட்ட உள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரி பட்டினம், புதுபாலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிப்பது, துணி துவைப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Sep 01, 2025 16:35 IST
தமிழ்நாட்டில் நீச்சல் குளங்களை முறையாக பராமரிக்க உத்தரவு
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் 3 மாதக் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- Sep 01, 2025 16:14 IST
கொடைக்கானல்: ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூல்
கொடைக்கானலில் ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் அந்தந்த இடத்தில் தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில், அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- Sep 01, 2025 15:40 IST
கிருஷ்ணகிரி: டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி
கிருஷ்ணகிரி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரியால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
- Sep 01, 2025 15:14 IST
சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் பல குறைகள்; திருப்பி அனுப்பிய நீதிமன்றம்
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் பல குறைகள் இருந்ததால் மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. குறைகளை திருத்தி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- Sep 01, 2025 14:14 IST
ஸ்விகி, சொமட்டோக்கு மாற்றாக புதிய செயலி
ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களுக்கு மாற்றாக புதிய செயலியை கடலூர் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் உருவாக்கியுள்ளது. அதிக கமிஷன் தொகை காரணமாக, இன்று முதல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தயாரித்த புதிய ஸாரோஸ் (Zaaroz) செயலியை, ஹோட்டல்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
- Sep 01, 2025 13:57 IST
குறுக்கே வந்த மாடு - கவிழ்ந்த பேருந்து
திடீரென சாலையின் குறுக்கே வந்த மாடு, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த அரசு பேருந்து. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Sep 01, 2025 13:05 IST
5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி
வீராணம் ஏரி இந்த ஆண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- Sep 01, 2025 12:34 IST
மர்மமான முறையில் இறந்து கிடக்கும் தெரு நாய்கள்
திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் காலனியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கும் தெரு நாய்கள் தெரு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டனவா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 01, 2025 12:12 IST
மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்: விஸ்வலிங்க தம்பிரான்
மதுரை ஆதீனத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மடத்தின் தம்பிரான் மனு அளித்தார். மதுரை ஆதீனத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கும் மரபுகளை தற்போதைய ஆதீனம் மீறுகிறார். மதுரை ஆதீன மட விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும். மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும். வழக்கில் இருந்து விடுபட்ட பின்னரே மதுரை ஆதீனம் தனது பணிகளை தொடர வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை தலையிட்டு பிற அதீனங்களுடன் ஆலோசித்து இளைய சன்னிதானத்தை தேர்வு செய்ய வேண்டும். மதுரை ஆதீனமடத்தில் அரசியல் கலப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
- Sep 01, 2025 11:35 IST
காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் - காஞ்சிபுரத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 80 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. குப்பைகளை தடுக்க மற்றும் மறுசுழற்சியை எளிதாக்க மதுபாட்டில் வாங்கும் போது கூடுதலாக ரூ.10 செலுத்தி பின்னர் காலி பாட்டிலைக் கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்பப் பெறுவதே இத்திட்டம். இந்த நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து டாஸ்மாக் குடோன் முன்பு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Sep 01, 2025 11:32 IST
பேருந்து கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். தனியார் பேருந்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- Sep 01, 2025 10:21 IST
சொத்து வரி முறைகேடு
மதுரை மாநகராட்சி ரூ.200 கோடி சொத்து வரி முறைகேடு புகார் எழுந்த நிலையில், பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
- Sep 01, 2025 09:41 IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகளுக்காக 2ம் அலகில், இன்று முதல் 75 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 அலகுகளைக் கொண்ட இங்கு தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 8 ஆண்டுகளாக சரி செய்யப்படாததால் மின் உற்பத்தி அதில் நடக்கவே இல்லை. தற்போது 2ம் அலகிலும் பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
- Sep 01, 2025 09:39 IST
இலங்கைக்கு ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் கடத்தல் - தூத்துக்குடி போலீஸ் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2500 கிலோ பீடி இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வலிநிவாரணி மாத்திரை, பீடி இலைகளை பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றவர்களை கடலோர காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.