கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த சாவடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரசாமி. இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தத்திற்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, சுந்தரசாமி தனது மகளுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம், 60 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் வீட்டு உபயோக பொருள்களை சீதனமாக கொடுத்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவருடைய மகள் ஞான சௌந்தரி கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, சுந்தரசாமி தனது மகள் திருமணத்திற்காக கொடுத்த சீர்வரிசை பொருட்களை, தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கோரி, சுந்தரசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கில், பல வாய்தாக்களில் ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி ஆகியோர் ஆஜராகவில்லை.
இந்நிலையில். இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (நவம்பர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த முறை விசாரணையிலும் பா.ஜ.க பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை.
அதனால், பா.ஜ.க பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிசாமி ஆகிய இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி ரகுமான், நவம்பர் 27-ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“