Advertisment

கோவையில் குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் இயந்திரம் தயாரிப்பு: பட்டதாரி இளைஞர் அசத்தல்

கோவையில் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் இயந்திரம் தயாரித்து பட்டதாரி இளைஞர் ஒருவர் விற்பனை செய்து வருகிறார்.

author-image
WebDesk
Nov 06, 2023 14:20 IST
New Update
Cbe Farm.jpg

கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் இயற்கை வேளாண் விவசாயி தீரஜ் ராமகிருஷ்ணா. பட்டதாரி இளைஞரான இவர் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் குறைந்த விலையிலான தீவனம் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். தீரஜ் பி.இ  பட்டப்படிப்பு படித்துள்ளார். இயற்கை வேளாண்மை மீது பற்று கொண்ட இவர் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டு கால்நடைகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நாட்டு பசு இனங்களைப் பாதுகாக்கும் வகையில் மாட்டுப் பண்ணை அமைத்து அவற்றை வளர்த்தும் வருகிறார். 

Advertisment

மேலும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தேங்காய் உறிக்கும் இயந்திரம், தேங்காய் உடைக்கும் இயந்திரம், பால் கரக்கும் இயந்திரம், தீவனம் அறுக்கும் இயந்திரம் எனப் பல்வேறு வகையான இயந்திரங்களை குறைந்த விலையில் உருவாக்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இவருக்கு சிறந்த விவசாயிக்கான விருது வழங்கி கௌரவித்தது. 

Cbe Farm1.jpg

இந்நிலையில் தற்போது அவர் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையிலான தீவனம் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். விவசாயிகள் விரும்பிய இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ள இந்த இயந்திரமானது 1 HP மோட்டார், பிளேடு மற்றும் பிரேம் ஆகியவை கொண்டு வடிமைக்கப்பட்டுள்ளது. இது 1 மணி நேரத்தில் 500 கிலோ பசுந்தீவனங்களை வெட்டக்கூடிய திறன் படைத்தாக அவர் கூறியுள்ளார்.  

கையாளுவதற்கு எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் விலை அனைத்து வரி உட்பட ரூ.10,000  ஆகும்.  இந்த இயந்திரத்தில் கோ- 4, கோ- 5, 5 நேப்பியர், சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்கள் மற்றும் மல்பரி, வாழைக்கன்றுகள் போன்றவற்றை வெட்ட முடியும். 

Cbe Farm2.jpg

மேலும் சிறிய விவசாய நிலங்களைக் கொண்ட  விவசாயிகளுக்கு இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மிகக் குறைந்த விலையுடைய இதனை தேவைப்படும் விவசாயிகளுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். கூடுமானவரை இதில் பழுதாகும் வாய்ப்பே இல்லை. இதனை வாங்கியவர்களுக்கு அதை இயக்குவதிலோ இல்லை வேறு இடர்பாடு ஏதாவது இருந்தாலும் 5 நாட்களுக்குள் இந்த இயந்திரத்தை நாங்களே மீண்டும் திருப்பி வாங்கிக் கொள்கிறோம். 

Cbe Farm3.jpg

பராமரிப்பிற்கு எளிதாகவும், விவசாயிகள் கையாளுவதற்கு எளிமையாகவும் இருக்கும் வகையில் மிகச் சிறிய அளவில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனை விவசாயிகள்,பண்ணைக் கூலித் தொழிலாளர்கள் என யார் வேண்டுமானாலும் இயக்க முடியும். தரமான பொருட்களைப் பயன்படுத்தி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறு குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அனைத்து வகை விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தீவனம் அறுக்கும் இயந்திரம் விவசாயிகளிடையே தற்போது பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது எனவும்  திரஜ் ராமகிருஷ்ணா கூறினார். 

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment