கோவையில் கட்டாய கல்வி தொடர்பாக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மண்டியிட்டு பிரம்பால் அடிவாங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நிதி தொடர்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முடக்கியதால் கல்வி வாய்ப்பை இழந்த ஒன்றரை லட்சம் ஏழை மாணவர்களிடம் கண்ணீர் மல்க மண்டியிட்டு மன்னிப்பு கூறும் போராட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
"Sorry ma" மன்னித்து விடுங்கள் பிரதமரும் முதல்வரும் முடக்கிய கல்வி உரிமையை உங்களுக்கு மீட்டு தர இயலாததற்கு சாரி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை சக போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் முதல்வரின் முகமூடி அணிந்து பிரம்பால் அடித்தனர். அப்போது 'சாரி மா' என முழக்கங்கள் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/e929e638-a3b.jpg)
இந்தப் போராட்டத்தின் போது பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.இ.,) சேர்க்கையை தமிழ்நாடு அரசு நடத்தவில்லை. மத்திய அரசு இதற்கான பணத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தரவில்லை. இதனால் இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர இயலவில்லை. ஏற்கனவே படித்து வரும் 6 லட்சம் குழந்தைகள் பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் இந்த கல்விக்கான நிதியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வந்து 60 நாட்களுக்கு மேலகிவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை நிறைவேற்றாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கல்வி பறிபோனதற்கு நாங்கள் ஏழை குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டு இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். இதற்கான பொறுப்பு முதலமைச்சருக்கும் பிரதமருக்கும். ஆனால் நாங்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கின்றோம்" என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.