கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கோவை மேயர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கல்பனா தெரிவித்திருந்தார். குடும்பச் சூழல் காரணமாக நெல்லை மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக பி.எம்.சரவணன் கடிதம் அளித்திருந்தார்.
இருப்பினும், 2 மேயர்கள் மீதும் வந்த புகார்களின் அடிப்படையில் கட்சி தலைமை வற்புறுத்தியதால், அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது
இதையடுத்து, நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது.
தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 29வது வார்டு திமு.க. கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல்முறை கவுன்சிலர் ஆவார். கோவை எம்.பி. ராஜ்குமாரின் ஆதரவாளர் ஆவார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
திருநெல்வேலியில் மேயர் கிட்டு அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட பவுல்ராஜ் என்ற கவுன்சிலர் எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“