கோவை மாநகராட்சியின் அனுமதி பெறாமல் மறைமுகமாக வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் மாட்டுப் பண்ணை செயல்படுவதை அறிந்த கோவை மாநகர மேயர் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை மாநகர் வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த வெள்ளலூர் கிடங்கில் தான் குவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் அனுமதி இன்றி மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த மாட்டு பண்ணை கவுன்சிலர்களின் உதவியுடன் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்தது. அதேபோல அனுமதி இன்றி சில குழுவினரும் குப்பை பொறுக்கி வருவதாகவும் புகார் இருந்தது.
இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் அனுமதி இன்றி மாட்டுப்பண்ணை நடத்தி வருவது தொடர்பாக தகவல் அறிந்த மாநகர மேயர் கல்பனா கடந்த ஒன்றாம் தேதி கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வை தொடர்ந்து மேயர் கல்பனா அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மாநகராட்சியில் எந்த டெண்டரும் எடுக்காமல் எப்படி மாட்டு பண்ணை செயல்பட்டு வருகிறது என கேள்வி எழுப்பிய மேயர், வரும் ஒன்றாம் தேதிக்குள் அனைத்தையும் காலி செய்து விட வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் மாட்டுப் பண்ணை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வெள்ளலூர் குப்பை கிடங்கின் அதிகாரி ஒருவரிடம் மேயர் பேசும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
அதில் அதிகாரி மேயரிடம் நான் ஒருவன் மட்டும் அல்ல இன்னும் அதிகாரிகள் உள்ளனர் .நான் ஒருவன் முடிவு செய்ய முடியாது என்றார்.
அதேபோல இந்த வீடியோவில் அதிகாரி நூறாவது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திகேயன், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மற்றொரு தி.மு.க கவுன்சிலர் அஸ்லாம் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“