scorecardresearch

கோவையில் மெட்ரோ; விரிவான திட்ட அறிக்கை விரைவில் இறுதி செய்யப்படும்: செந்தில் பாலாஜி

கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Senthil balaji
Minister Senthil balaji

கோவையில் இன்று (மார்ச் 25) மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 2022-23 தார்சாலை பணிகள், சீர்மிகு நகர திட்டம், பொது நிதிப்பணிகள் என கோவை சிங்காநல்லூர், தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 32.78 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி கோவை தெற்கு தொகுதி கெம்பட்டி காலனி பகுதியில் தார் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, “கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. குறிப்பாக சாலைப்பணிகளுக்கான ஒப்புதல் முதல்வர் மூலம் பெறப்பட்டு டெண்டர் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படுகிறது. கடந்த காலங்களில் புதுபிக்கப்படாத தார் சாலைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 70% சாலைப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது புதிய சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “குறுகிய காலத்தில் 121 கிமீ சாலைக்கு ரூ. 223 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இது கோவை மாநகராட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். இடையர்ப்பாளையம்- தடாகம் சாலைப்பணிகள் பாதி முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க கூறப்பட்டுள்ளது எனவே கூடிய விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும். மெட்ரோ பணிகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை (DPR) இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும். கோவைக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. செம்மொழி பூங்கா அறிவிப்பு, எழில்மிகு கோவை மிக சிறப்பான திட்டமாகும்.

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய சாலைகள் தான் பழுதடைந்து உள்ளது. சாலைப்பணிகளுக்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதே போல பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் புதுப்பிக்கபடாமல் இருந்தது. இதனையெல்லம் கவனத்தில் கொண்டுதான் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் குறித்த கேள்விக்கு, 30 நிமிட செய்தியை 3 நிமிடத்தித்கு கேட்கிறீர்கள் என பதிலளித்த அவர் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுடன் சேர்த்து அப்பணிகளும் செய்யபட வேண்டி உள்ளது” என பதிலளித்தார். இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி:பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore metro works will begin soon says minister senthil balaji

Best of Express