/indian-express-tamil/media/media_files/2025/07/05/coimbatore-car-fire-2025-07-05-13-17-17.jpg)
Coimbatore car fire
கோயம்புத்தூரில் பரபரப்பான மேட்டுப்பாளையம் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, காரை ஓட்டிச் சென்ற அதன் உரிமையாளர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். பெட்ரோல் மற்றும் கேஸ் எரிபொருள் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சாலை கோவையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் ஒரு முக்கிய வழித்தடமாகும். தற்போது மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், இந்தச் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
நேற்று காலை, நல்லாம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழக அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ஜோதிராஜ், தனது காரில் சாய்பாபா காலனியில் இருந்து நல்லாம்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அவரது காரில் பெட்ரோல் மற்றும் கேஸ் ஆகிய இரு எரிபொருள் இணைப்புகளும் இருந்தன.
கோவையில் பெட்ரோல் மற்றும் கேஸ் இணைப்பு கொண்ட கார் நடுரோட்டில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் காரின் உரிமையாளர் காயமின்றி உயிர் தப்பினார்.#coimbatorepic.twitter.com/EfFgIl4xmM
— Indian Express Tamil (@IeTamil) July 5, 2025
அப்போது, காரில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்படுவதை சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் ஜோதிராஜிடம் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த ஜோதிராஜ், பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகக் கருதி, காரை கேஸ் எரிபொருளுக்கு மாற்றியுள்ளார். கேஸ் எரிபொருளுக்கு மாற்றியதும் லேசான சத்தம் கேட்டுள்ளது. அடுத்த சில நொடிகளிலேயே காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை உடனடியாகக் கண்ட ஜோதிராஜ், சுதாரித்துக்கொண்டு காரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். அவர் இறங்கிய அடுத்த கணமே, கார் மளமளவென தீப்பற்றி எரிந்து நாசமானது.
இந்தத் தீ விபத்து குறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் உடனடியாக அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
நடுரோட்டில் பெட்ரோல் மற்றும் கேஸ் இணைப்பு கொண்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.