மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் 8 ஆம் கட்டம் மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில், ’சிறுகுறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வினால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
30 வகையான மின் கட்டண உயர்வு ஏற்படுத்தியுள்ளனர் அதில் நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டண குறைவுக்கான கோரிக்கை தான். சிறுகுறு தொழில்களை பாதுக்காக்க முதல்வரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
430% நிலைக்கட்டணத்திற்கு கட்டணம் உயர்த்தி உள்ளனர். மாதாந்திர கட்டணம் உயர்த்தி உள்ளனர்.
இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். நகை நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
மேலும் தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின் வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் தொழில்த்துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமே தவிர.. இதை அரசியலாக்க வேண்டும். வாழ்வாதார பிரச்சனையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது. முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அரசு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும். மேலும் தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சார வாரியம் தொடர்ச்சியாக தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். 1.75 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக , பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு சிறுகுறு தொழிலை அழிப்பதற்கு வழிக்காட்டபடுகிறதோ என அச்சம் எழுகிறது.
எனவே முதல்வர் விழித்து கொண்டு தொழில்துறையை பாதுகாக்க வேண்டும். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையினால் நம் மாநிலத்தில் இருக்க கூடிய சலுகைகளை வாங்கி கொண்டு நம் இடத்தை உற்பத்தி சென்டர்களாக இல்லாமல் அசம்பல் சென்டர்களாக மாற்றி வருகின்றனர். இதனால் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“