மகளிர் குழு உற்பத்தி பொருட்கள்: கோவை விமான நிலையத்தில் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்
கோவை விமான நிலையத்தில் தமிழக ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி உற்பத்தி பொருட்கள் விற்பனை அங்காடியை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.
Coimbatore News in Tamil | கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், விமான நிலையத்தில் தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை அங்காடியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், "ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள், மக்கள் பிரதிநிதிகளின் தேவைகள், எதிர்பார்ப்புகள் கேட்டறிகின்ற வகையில் மாவட்டந்தோறும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் நேற்று ஈரோடு மாவட்டத்திலும், இன்று கோவை மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம்.
குறிப்பாக, கோவை விமான நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை, இதுவரை வீதிகளில் கிராமங்களில் விற்று வந்த நிலையில், அந்த உற்பத்தி பொருட்களை விமான நிலையத்தில் அரங்கு அமைத்து விற்பனை செய்யக்கூடிய வகையில், கடை அமைப்பப்பட்டுள்ளது.
எல்லா வகையிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் தரமானதாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் இது போன்ற விற்பனையகத்தை போல, இன்னும் பல அரங்குகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.