கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. குறிப்பாக இந்த இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் கவுண்டம்பாளையம், சிவானந்த காலனி போன்ற நகரில் பல பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் அதிகாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது.
கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், மதுக்கரை, வாளையார் , வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம் போன்ற குளங்கள் பனி மூட்டத்தால் ரம்மியமாக காட்சி அளித்தன. உக்கடம்,செல்லபுரம், இராமநாதபுரம், பீளமேடு, மசக்காளி பாளையம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் நிலவியதால் இதமான சூழல் ஏற்பட்டது.
வாகன ஓட்டிகள் தங்களது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். இந்நிலையில் காலை 7 மணிக்கு பின்னராக பனி மூட்டம் மெல்ல விலகி இயல்பு நிலைக்கு திரும்பியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“