கோவையில் நீதிமன்றம் பின்புறம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவையில் நீதிமன்றம் பின்புறம் பட்டப் பகலில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் ஒரு கும்பல் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் கோகுல் என்பவரை கொலை செய்தது. அதேபோல மனோஜ் என்பவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதில் குற்றத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தப்பிக்க முயன்ற கௌதம் மற்றும் ஜோஸ்வா ஆகிய இரண்டு பேரும் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவரும் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை மீதமுள்ள ஐந்து பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றில் நீதிபதி கிருத்திகா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்ட டேனியல், அருண் , ஹரி என்கிற கெளதம், பரணி செளந்தர், சூர்யா ஆகியோரை விசாரித்த நீதிபதி 5 பேருக்கும் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”