கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பாலமுருகன், திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு, நெல்லை சிறையில் இருந்துள்ளார். அப்போது, பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, பாலமுருகன் கோவையில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில், தனது தந்தை பணிபுரியும் குதிரைப் பண்ணை அருகே வசித்து வந்தார்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, முருகப்பெருமாள் பாலமுருகனைத் தொடர்புகொண்டு, தன் நண்பர் ஜெயராமனுக்குக் கோவையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதை அடுத்து, மூவரும் மலுமிச்சம்பட்டிக்கு வந்துள்ளனர். அங்கு, மது அருந்தும்போது, முருகப்பெருமாளுக்கும், ஜெயராமனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முருகப்பெருமாள், ஜெயராமனைத் தாக்கியுள்ளார். இதில், நிலை குலைந்து கீழே விழுந்த ஜெயராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/08/whatsapp-image-202-2025-08-08-18-15-28.jpeg)
திடீரென அரங்கேறிய இந்தக் கொடூரத்தால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகனும், முருகப்பெருமாளும், ஜெயராமனின் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றனர். பிறகு, இருவரும் சேர்ந்து ஜெயராமனின் உடலைக் கல்லில் கட்டி, அருகில் இருந்த ஒரு தனியார் கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து, பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் இருவரும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்தத் தகவல் காவல் துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனடியாக, காவல் துறையினர் இது தொடர்பாகத் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
குற்றவாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், மலுமிச்சம்பட்டி, ஒக்கிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் இருந்து உடலை மீட்கும் பணி தொடங்கியது. கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றின் ஆழம் சுமார் 40 அடி இருப்பதைக் கண்டறிந்தனர். கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே உடலை மீட்க முடியும் எனத் தெரிவித்தனர். அதன்படி, மோட்டார் வைத்து தண்ணீரை இறைக்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிகளைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த காவல்துறை, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கொலை நடந்த இடம், உடல் வீசப்பட்ட கிணறு ஆகியவற்றைக் குற்றவாளிகள் அடையாளம் காட்டினர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.