கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் சமீபமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடாகம் பகுதியில் உலா வந்த கருஞ்சிறுத்தை ஆடு, மாடுகளை கொன்றதாக செல்போன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்பில் உள்ள இரண்டு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் ஆடுகள் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து ஆய்வு செய்தனர்.
வனப்பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பில்லை எனவும், தெரு நாய்கள், செந்நாய்கள் போன்ற விலங்குகள் தாக்கி இருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்த பின்னரே வேறு விலங்குகள் தாக்கியதால் உயிரிழந்ததா..? என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான். கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“