Coimbatore: neelampur - madhukarai road into 6 lane, E.R.Eswaran (General Secretary of the Kongunadu Makkal Desia Katchi)
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
Advertisment
கோவை நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 28 கிமீ தூரத்திற்கு உள்ள L&T பைபாஸ் இருவழிச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. பாலத்துரை ரோடு ஜங்ஷன் பகுதியில் துவங்கிய இந்த நடைபயணம் நீலாம்பூர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்த நடைபயணத்தில் அக்கட்சியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி நடைபயணம் மேற்கொண்டனர்.
Advertisment
Advertisements
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கூறியதாவது:-
நீலாம்பூர் பகுதியில் இருந்து மதுக்கரை வரை உள்ள பைபாஸ் சாலை பல வருட காலங்களாக இரு வழிச்சாலையாகவே இருப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீலாம்புரை அடுத்த சேலம் பகுதியில் ஆறு வழிச்சாலையாகவும் மதுக்கரையை அடுத்த கொச்சின் சாலை ஆறு வழிச்சாலையாகவும் இருக்கின்ற நிலையில் இடைப்பட்ட பகுதியில் இருவழிச் சாலையாக இருப்பதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இடைப்பட்ட இந்த பகுதியும் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் சாலை விபத்துகள் இல்லாமலும் பயணிக்க இயலும்." என்றார்.
மேலும் 1992ல் இந்த சாலை பணிகள் துவங்கப்பட்ட பொழுது அன்றைய நாட்களில் இருவழிச் சாலை போதுமானதாக இருந்தது என தெரிவித்த அவர், தற்போது 30 ஆண்டுகள் ஆன நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதை கருத்தில் கொண்டு இதனை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டார். இது குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தானும் இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளதாகவும் இது போன்ற பல்வேறு அழுத்தங்கள் கொடுத்த நிலையிலும் இதுவரை ஆறு வழிச்சாலையாக இந்த சாலை மாற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் இப்பகுதியில் மேம்பாலங்களும் தேவைப்படுவதாகவும் இந்த சாலை கோவை மாநகரத்தின் புறவழிச்சாலையாக உள்ள நிலையில், புறவழிச் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் புறவழிச் சாலையை பயன்படுத்தாமல் மாநகருக்குள் இருக்கின்ற சாலையை பயன்படுத்தி வருவதாகவும் எனவே நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக உடனடியாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதோடு, இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் 1990 களிலேயே முடிந்து விட்டதாகவும் தெரிவித்த தற்பொழுது இந்த சாலைகளில் விவசாய நிலங்கள் இல்லை எனவும் எனவே விவசாய போராட்டங்கள் இந்த சாலைக்கு பொருந்தாது என இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil