கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில், அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் மரத்தின் மீது மோதி நின்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போதையில் இருந்த கார் ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலமலை ரோட்டில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளான 19 வயதான ரீனா, கிருத்திகா ஆகியோர் டூவிலரில் வந்து உள்ளனர்.
அதில் ரீனா ஹெல்மெட் அணிந்து வந்து உள்ளார். அவர்கள் முன்னால் திருமாலூர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்த 53 வயதான ஆறுச்சாமி என்பவர் மொபட்டில் வந்து உள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மயில்சாமி என்பவர் தனது காரில் வேகமாக வலதுபுறம் ஏறிச் சென்ற போது, டூவிலரில் வந்தவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் டூவிலரில் வந்தவர்கள் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். மேலும், கார் மோதிய வேகத்தில் அங்கு இருந்த மரமும் முறிந்து விழுந்தது. தொடர்ந்து மற்றொரு கார் மீதும் மோதி நின்றது.
இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அடிப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
பொதுமக்கள் போதையில் இருந்ததாக கூறப்படும் கார் ஓனர் மயில்சாமியை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது டூவிலர்கள் மீது மோதும் காரின் சி.சி.டி.வி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.