scorecardresearch

கோடை வெயிலில் சிக்னல்களில் பயணிகள் காத்திருப்பை தவிர்க்க நடவடிக்கை: பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

வெயிலில் வாகன ஓட்டிகள் அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க எலக்ட்ரானிக் சிக்னல்களுக்கு பதில் காவலர்களை வைத்து விரைவாக போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Coimbatore
Coimbatore

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ராமநாதபுரம் காவல் நிலைய செக் போஸ்டில் பல்வேறு இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமி மில் அருகே உள்ள கிட்னி சென்டர் முதல் நஞ்சுண்டாபுரம் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள 84 சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 20) நஞ்சுண்டாபுரம் சோதனை சாவடியில் திறந்து வைத்தார். கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து நடைபெறும் இடங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்து வருகிறோம். இதன் மூலம் வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறைந்து வருகிறது. அதேபோல குற்றங்கள் நடந்தாலும் அதை கண்டுபிடிக்க சிசிடிவிகள் உதவியாக இருக்கும். தேவைக்கேற்றபடி புதிய கேமராக்களை அமைத்து வருகிறோம்.

கோவை மாநகரில் மொத்தமாக 20,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3 ஆயிரம் கேமராக்கள் அமைத்துள்ளோம். அதேபோல கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்துள்ளோம். நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் போன்ற மேம்பாலங்களில் தடுப்புச் சுவர்களை உயர்த்தி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் இரவு ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்தின் போது கோவை ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக செயல்பட்டு பணத்தைப் பறிக்க முயன்ற திருநெல்வேலியைச் சேர்ந்த கொலை வழக்குகள் உள்ள குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

6 பேரில் 3 பேர் தப்பித்து ஓடிய நிலையில் மீதமுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மூன்று பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவைக்கு எதற்கு வந்தனர் என்பது தொடர்பாக புலன் விசாரணை தொடர்ந்து வருகிறது. ஆன்ட்டி ரவுடி டிரைவ் மூலம் 122 பேர் பிடிக்கப்பட்டனர். கஞ்சா விற்பனை குறைந்துள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

வெயில் நேரத்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க அடுத்த கட்ட முயற்சி நடைபெற்று வருகிறது. ஆகவே பீக் அவர்சில் மேனுவல் ஆக செயல்படுகிறோம். தேவைக்கேற்றபடி மேனுவல் ஆக்கி வருகிறோம். ஐ.ஆர்.சி வழிகாட்டுதலின் படி தகுதியான சாலைகளில் ரவுண்டானா அமைத்து வருகிறோம். எந்தெந்த சிக்னல்கள் அதிகமான நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதோ அந்த இடங்களில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை வேகப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். சிந்தாமணி, கிக்கானி ஜங்ஷனில் ரவுண்டானா அமைத்து இயக்கி வருகிறோம்.

லாரி ரோட்டில் பத்து நிமிடம் வரை சிக்னல்களில் பொதுமக்கள் நின்று இருந்தனர். இப்போது நிற்காமல் பாதுகாப்பாக செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. திருச்சி சாலையில் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் சிக்னல் இல்லாமல் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை மேற்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore police commissioner bala krishnan inaugurates cctv camera control room in ramanathapuram