ஆப்ரேசன் ரீபுட்: 'ஒரு வருடத்தில் 173 இளம் குற்றவாளிகளுக்கு மீண்டும் கல்வி' - கோவை கமிஷனர் தகவல்
கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காவல் துறையினரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டம் குறித்து உரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
இளம் குற்றவாளிகளை தடுக்கும் வகையில் பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை ஆப்ரேசன் ரீபுட் என்ற திட்டம் மூலம் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுக செய்து வைக்கப்பட்டது. போலீஸ் - அக்கா திட்டத்தின் மூலம் பணியாற்றும் காவலர்கள் மூலம் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பேசியுள்ளனர்.
கோவை மாநகரில் 173 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 குழந்தைகள் வெளி மாநிலத்தில் உள்ளதாகவும் இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.
பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். மாணவ - மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடை நிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளது. எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம்.
3 மாதங்களுக்கு ஒருமுறை இடை நிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். கோவையில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம். அவர்களை நெருங்கிவிட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil“