தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் நேற்று (08.06.2018) கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அஇஅதிமுக சார்பில் செம்மலை எம்.எல்.ஏ, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் கே. பாலகிருஷ்ணன் , கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ. தனியரசு எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்றனர். புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பற்றியும் அதன் பின்னணி குறித்தும் கட்சித் தலைவர்கள்,தங்களது கருத்துகளை முன்வைத்தார்கள். இயக்குநர் அமீர் பேசத் தொடங்கிய உடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜகவினர், அமீருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அரங்கில் போராட்டம் நடத்தி உள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.இறுதியாக வேறுவழியின்றி நிகழ்ச்சி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் , புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை நிகழ்ச்சி நடந்த அரங்கின் நிர்வாகியிடம் புகார் ஒன்றைப் பெற்ற கோவை மாநகர காவல்துறை , புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது 153 ஏ ( இரு குழுக்களிடையே பிரிவினையைத் தூண்டுதல்), 505( பொதுமக்களிடையே அமைதியைக் குலைத்து , அரசுக்கு எதிராக நடந்து கொள்ளுதல்) மற்றும் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா? அரசியல் காரணங்களுக்கா?”என்ற தலைப்பில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியை நடத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும், சேனலில் பணியாற்றும் கோவை செய்தியாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஊடகத்தின் கருத்து சுதந்திரத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தியுள்ளதாக பல்வேறு ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளது. காவல்துறையின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னைப் பத்திரிகையாளர் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.