/indian-express-tamil/media/media_files/2025/05/21/MntUz0ACVk4ioLgTl8sQ.jpg)
Coimbatore
கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில், கடந்த நான்கு நாட்களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் யானை நேற்று (மே 20) பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த மே 17 அன்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில், தனது குட்டியுடன் தாய் யானை மயங்கி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் யானையை பெல்ட்டால் தூக்கி நிறுத்தி, தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார், மேகமலை புலிகள் காப்பக மருத்துவர் கலைவாணன் மற்றும் மருத்துவர் முத்துராமலிங்கம் ஆகியோர் இந்த சிகிச்சைப் பணிகளை மேற்பார்வையிட்டனர். இருப்பினும், அனைத்து முயற்சிகளும் பலனின்றி யானை உயிரிழந்தது.
யானையின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் அனைவரையும் உலுக்கியது.
இறந்த யானையின் வயிற்றில் சுமார் 15 மாத வளர்ச்சி அடைந்த குட்டி யானை இருந்ததும், அத்துடன் அதிர்ச்சியளிக்கும் விதமாக பிளாஸ்டிக் கழிவுகளும், புழுக்களும் இருந்ததும் கண்டறியப்பட்டது.
கருவுற்றிருந்த யானைக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் போனது வனத்துறையினரின் அலட்சியத்தையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "யானையின் வயிற்றில் குட்டி இருந்த நிலையில், அதற்கேற்ற சிறப்பு சிகிச்சைகள் ஏன் அளிக்கப்படவில்லை?" என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.
யானையின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும், இது வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. "மனிதர்களின் அலட்சியத்தால் வனவிலங்குகள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்" என வன ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.