கோவையில் தனியார் பேருந்து உரிமையாளர் தனது பேருந்தை இன்று ஒருநாள் மட்டும் பயணிகள் அனைவருக்கும் டிக்கெட் இல்லாமல் இலவசமாக இயக்கியது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் இன்று ஒரு நாள் நாங்கள் ஊதியம் பெறமால் பணிசெய்கிறோம் என்று கூறியது பொதுமக்களையும் பயணிகளையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் வேலவன் பஸ் சர்வீஸ் நிறுவனம் வழித்தடம் எண் 22 என்ற நகர பேருந்தை இயக்கி வருகிறார். இவர் தனது தந்தையின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு - தனது நிறுவனத்தின் பேருந்துகளில் காலை முதல் இரவு வரை இன்று ஒரு நாள் குழந்தைகள் , பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைவரும் இலவசமாக பயணித்தனர்.
இது குறித்து நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், “எனது தந்தை சுப்பிரமணியம் சரவணம்பட்டி பகுதியிலிருந்து காந்திபுரத்திற்கு பேருந்தில் பணிக்கு சென்று வருவார்.
அப்போது ஏழ்மையின் காரணமாக சில சமயங்களில் 30 பைசா பயணச்சீட்டைக் கூட வாங்க முடியாமல் நடந்தே வருவார். அப்போது அவர் சொந்தமாக ஒரு பேருந்து வாங்க வேண்டும் எண்ணி அதற்க்கான முயற்சியில் இறங்கினார். சமீபத்தில், அவர் காலமானார்.
இதனால் அவரது கனவை நனவாக்க வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு கடந்த வருடம் 2-ம் ஆண்டு நினைவு தினத்தில் வழித்தடம் எண் 22 என்ற நகர பேருந்தை வாங்கினேன்.
எனவே எனது தந்தையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்து பொது மக்கள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி இன்று ஒரு நாள் முழுவதும் பொது மக்களுக்கு இலவச சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு இல்லாமல் இலவசமாக அழைத்து சென்று வருகிறோம் என்று தெரிவித்தார்.
எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இந்த தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் எனக்கு இன்பதர்ச்சியளிக்கும் விதமாக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் இன்று ஒரு நாள் நாங்கள் ஊதியம் பெறமால் பணிசெய்கிறோம் என்று கூறியது என்னை நெகிச்சியடைய செய்கிறது என்றார்.
ஒருநாள் இலவச பேருந்து பயணம் குறித்து பொது மக்கள் கூறுகையில், தந்தையின் நினைவு தினத்தில் இப்படி பயணிகளை இலவசமாக அழைத்து செல்வது மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே சமயத்தில் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.
அவரது தந்தையின் ஆன்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். மேலும், இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய எங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் கூறுகையில், ராஜ்குமார் ஒரு முதலாளி போல் இல்லாமல் நண்பர்கள் போலவே எங்களுடன் கனிவாக பழகுவார் பேருந்தை வைத்து வெற்றிகரமாக நடத்துவதே மிகவும் சிரமமாக உள்ளது.
இந்த மாதிரியான காலகட்டத்தில் ஒரு நாள் முழுவதும் பயணிகளுக்கு இலவச பயணம் என்பது எங்களை மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது பணிகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று நாங்கள் ஆண்டவரை வேண்டிக்கொள்கிறோம் என்றனர். மேலும், அவருக்கு ஒத்துழைக்கும் விதமாக இன்று ஒரு நாள் நாங்கள் ஊதியம் பெறாமல் பணி செய்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்