கோவையில், தனியார் கல்லூரியில் சீனியர் மாணவரை, ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பாலக்காடு சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவரை, பல ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து தாக்கி துன்புறுத்திய சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜூனியர் மாணவர்களின் பணத்தை சீனியர் மாணவர் திருடியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பல ஜூனியர் மாணவர்கள் இணைந்து கல்லூரி விடுதியில் சீனியர் மாணவரை கடுமையாக தாக்கினர்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் இது போன்ற வன்முறை கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இச்சம்பவம் ராக்கிங் அல்ல. முதலாம் ஆண்டு மாணவர் தங்கி இருந்த அறையில் பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு சீனியர் மாணவரை தாக்கியுள்ளனர். இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர் ஆகியோரின் பெற்றோர் முன்னிலையில் நாளை (24.03.2025) விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.