/indian-express-tamil/media/media_files/2025/03/25/8i9X5Qudp5V8fYBU40QK.jpg)
கோவை மாவட்டம், உக்கடம் சி.எம்.சி காலனியில் 520 மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் 432 என நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் வசிக்கும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதன் முதல் கட்டமாக உக்கடத்தில் 222 வீடுகளும், வெரைட்டி ஹால் ரோட்டில் 192 வீடுகளும் கட்டப்பட்டன. இவற்றை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், தற்போது வரை பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியிடம் மக்கள் முறையிட்டதாகவும், இதன்பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
எனினும், தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் புகுந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களை வெளியேற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எனினும், போலீசாரின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே, வீடு பெறாத குடும்பத்தினருக்கு தான் முதலில் வீடு கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு இரண்டாம் கட்டமாக வீடுகள் வழங்கக் கூடாது என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.