வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது
குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தததன் காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த பகுதியில் மழை பாதிப்புகள் தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் கல்பனா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வம் மற்றும் அதிகாரிகள் நேற்றிரவு அங்கு ஆய்வு செய்தனர்.
செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது.
அதிகமாக தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர், அசோக் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இவ்வளவு பாதிப்பு இருந்த போதிலும் இளைஞர்கள், சிறுவர்கள் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் ஜாலியாக மீன் பிடித்து விளையாடினர்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“