/indian-express-tamil/media/media_files/2025/06/13/N3oOho0wajHjjhcKfrIX.jpeg)
கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கோவைக்கு விரைந்து வந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 27 வீரர்களும், மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்களும் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இந்த வீரர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் வால்பாறை மலைப் பகுதிக்கும், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் தொண்டாமுத்தூர் பகுதிக்கும், மேலும் 27 வீரர்கள் மேட்டுப்பாளையம் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மைத் துறை, மீட்புப் பணிகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்துத் துறைகளையும் அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வருவாய்த் துறையினர் முகாம்கள் அமைத்து, மீட்புப் படையினரை தங்க வைத்துள்ளனர். மழை பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களுடனும் பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். படகுகள், மரங்கள் வெட்டும் இயந்திரம், லைப் ஜாக்கெட், 2.5 கிலோ வால்ட் திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் போன்ற ஏராளமான மீட்பு உபகரணங்கள் அவர்களிடம் உள்ளன.
அதே சமயம், கோவை மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு அலுவலகங்களிலும், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடத் தயார் நிலையில் உள்ளனர். மின் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரும் தங்களது பணிகளைச் செய்யத் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் சென்றுள்ள மீட்பு குழுவினர், பவானி ஆற்றின் அருகே உள்ள வினோபாஜி நகர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்புப் படையினரின் வருகை, ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அவர்களைக் காக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, கோவை மாவட்டம் கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுடனும் தயார் நிலையில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.