வரலாற்று ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற வரலாற்று நில ஆவணங்கள் கண்காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை சார்பாக நடைபெற்ற நிலம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் நிலத்தை முறையாக மேலாண்மை செய்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.கோவை வருவாய் துறை சார்ந்த நில அளவை உட்பட பல்வேறு துறையில் ஓய்வு பெற்றோர் இணைந்து நிலமேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை துவங்கி உள்ளனர்.
இதற்கான துவக்க விழா அவினாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் முத்துராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வரலாற்று நில ஆவணங்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி, வரலாற்று ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நில மேலாண்மை, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய பணிகளை மேற்கொள்வது குறித்து பயிற்சிஅளிக்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் நில மேலாண்மை திறன்களை மேம்படுத்துவது, நிலப் பயன்பாடு, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் ஆராய்ச்சி செய்வது, நிலப் பதிவுகளை நவீனமயமாக்குதல், நில அளவீடு செய்தல் போன்ற நில மேலாண்மை தொடர்பான பணிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது, குறித்து நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளதாக முத்துராஜா தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.