பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்கர் பள்ளி சாலையில் கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் காக்கி கால் சட்டை அணிந்து பயிற்சி மேற்கொண்டனர். இந் நிலையில் பள்ளி வாளகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது குறித்த புகைபடம், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற நிலையில், மாநகராட்சி பள்ளி வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது தெரியவந்தது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் கேட்ட போது,கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும், பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார். மேலும் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி செய்ய அனுமதித்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்ட தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் அங்கு சென்றபோது அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு பள்ளியின் கேட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். மேலும் இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மாநகராட்சி ஆரம்பபள்ளி வளாகத்தில் பயிற்சி நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு

தாங்கள் ஆர்.எஸ்.எஸ் மூலமாக வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதை திரித்து ஷாக்கா நடைபெற்றதாக தவறான குற்றச்சாட்டை எழுந்துள்ளது எனவும் கோவை முழுவதும் இன்று 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே மாநகராட்சி பள்ளி மற்றும் நிர்வாகத்தை கண்டித்தும், மாநகராட்சி ஆரம்பபள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியதை கண்டித்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil