கோவையில், பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இதனிடையே, அவிநாசி சாலை மேம்பாலம் விரிவாக்கம் செய்யப்படுவதால் பள்ளிக்கான நிலத்தை இப்பணிக்கு எடுத்துக் கொண்டதாக கூறுகின்றனர். இதனால் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பள்ளி செயல்படும் அதே இடத்தில் வணிக லாபத்திற்காக மற்றொரு கட்டடம் கட்டுவதற்கு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனைக் கண்டித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சரியான முடிவு எட்டப்படவில்லை என்று பெற்றோர் கூறுகின்றனர்.
இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (மார்ச் 18) திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதனிடையே அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.