கோவையில், செயல்பட்டு வரும் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் இறைச்சிக் கழிவுகளுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தினர்.
கோவை, அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவில் வித்யா மந்திர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சின்னியம்பாளையம் தபால் நிலையத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏனெனில், இப்பள்ளி வளாகத்தின் விளையாட்டு மைதானம் அருகே இறைச்சிக் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அஞ்சல் அட்டைகள் மற்றும் பதிவு கடிதங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.