கோவை மாவட்டம் காரமடை அருகே முதியவர் மீது தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
காரமடை அருகே காளட்டியூர் பகுதியை சேர்ந்தவர் மணி தாசன் (65). இவர் இன்று மதியம் 12 மணி அளவில் காரமடை மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மறுபுறம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது, கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த தனியார் பேருந்து அதிவேகமாக வந்து மணிதாசன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணிதாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மணி தாசன் மீது தனியார் பேருந்து மோதும் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
மேட்டுப்பாளையம் கோவை சாலையில் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. எனவே வட்டாரப் போக்குவரத்து துறையும் காவல் துறையும் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீதும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“