கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை தள்ளிவிட்டும், அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்து, அங்கு வரும் வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டி விடுகின்றனர்.
இந்நிலையில் கோவை குற்றாலம் செல்லும் சாலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாடிவயல் அடுத்த நல்லூர்வயல் ஆதிவாசி, பழங்குடியினர் வசிக்கும் கிராமப் பகுதியில் நேற்றிரவு ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி பெண்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவு செய்து உள்ளார்.
அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
மீண்டும் மீண்டும் ஒற்றை காட்டு யானை இரவு நேரத்தில் ஊருக்குள் வருவதால் உயிர் பயத்தில் தூக்கத்தை தொலைத்து விட்டதாகவும், இதற்கு வனத்துறை நிரந்த தீர்வு காண வலியுறுத்தியும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“