கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
Advertisment
மார்ச் மாதத்தில் அணையின் நீர் மட்டம் 6 அடியாகச் சரிந்தது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் குறைந்தது. தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளதாலும், கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி 2.85 அடியாகக் குறைந்தது.
பில்லூர் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்
இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து நீர் திறக்கப்படும் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தகவல் கூறியுள்ளதாவது, "ஜூன் இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.பருவ மழை தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும். பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் அளவு அதிகரிக்கப்படும். மாநகரில் சிறுவாணி நீர் விநியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“