கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விளக்கப் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; ‘தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விளக்கப் புகைப்பட கண்காட்சி அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டேன். குறிப்பாக இந்த பகுதியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் வந்து செல்வதால் அவர்கள் அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் நலத்திட்ட உதவிகளையும் அது குறித்தான விளக்கங்கள் அடங்கிய இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏதுவாக இருக்கும். அதனால் தான் இங்கு இந்த கண்காட்சி அரங்க அமைக்கப்பட்டுள்ளது.
தலைமையில் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் முடிவு, பேச்சுவார்த்தையில் இருக்கும்போது நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது.
எதையுமே விமர்சனம் செய்யாதவர்கள் யாரும் இல்லை. இன்னொரு கட்சி செய்வதை இன்னொரு கூட்டணி கட்சி செய்வதை இன்னொரு கூட்டணி கட்சி விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது.
இதை அரசியல் ரீதியாக ஒரு சரியான நடவடிக்கையாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
பொதுமக்கள் எடுக்க வேண்டிய முடிவு அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக தான் சரியாக இருக்கும். அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள், பல கருத்து கணிப்புகள் அதை தான் சொல்கிறது, அண்ணாமலை சொல்வதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
எல்லோருமே கலைஞர் பெயரை சொல்லி தான் கூட்டணி சார்பில் ஓட்டு கேட்டு கொண்டு இருக்கிறோம், இதில் என்ன புதிதாக தவறு கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. இதுவெல்லாம் ஒரு குற்றச்சாட்டு, இதுக்கெல்லாம் பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“