Coimbatore News: என்னதான் கொரோனா நிவாரண உதவிகள் என்றாலும், ஆளும் கட்சிக்கும் பிரதானக் கட்சிக்கும் இடையில் அரசியல் இல்லாமல் இல்லை. கொங்கு மண்டலத்தில் அரங்கேறிய, ‘இட்லி பாட்டி’ சீன்களே அதற்கு லேட்டஸ்ட் சாட்சி.
கோயம்புத்தூர் வடிவேலம்பாளையத்தில் வசிக்கும் 85 வயது கமலாத்தாள், ஏற்கனவே தேசிய கவனம் பெற்றவர். இந்த வயதிலும் இட்லி கடை வைத்து, சொந்தக் காலில் நிற்கிறார் இவர். விசேஷம் அதுவல்ல, இந்த விலைவாசியிலும் ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு வழங்குகிறார் கமலாத்தாள்.
இதை அறிந்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா சில மாதங்களுக்கு முன்பு ட்வீட் செய்ய, அகில இந்திய அளவில் கமலாத்தாள் பிரபலம் ஆனார். இந்தச் சூழலில், திமுக தரப்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் பணி நடக்கிறது. இதற்காக 90730 90730 என்கிற எண்ணை திமுக வெளியிட்டிருக்கிறது. முதல் 5 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் இந்த எண்ணை தொடர்புகொண்டு உதவி கேட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதன் ஒரு கட்டமாக கோவை வடிவேலம்பாளையத்தில் கமலாத்தாளை கடந்த சனிக்கிழமை திமுக நிர்வாகிகள் சந்தித்தனர். அங்கிருந்தபடியே மு.க.ஸ்டாலினுடன் வீடியோ காலில் கமலாத்தாளை பேச வைத்தனர். கமலாத்தாளின் வயது உள்ளிட்ட விவரங்களை கேட்ட ஸ்டாலின், ‘உதவி கிடைத்ததா?’ என்றும் விசாரித்தார். திமுக தரப்பில் பலசரக்குப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் உதவியாக கொடுத்தனர்.
கொங்கு மண்டலம், ஏற்கனவே திமுக.வுக்கு ‘வீக்’கான ஏரியா. எனவே அங்கு திமுக இமேஜை பில்டப் செய்யும் முயற்சியாகவே இந்த கமலாத்தாள் விவகாரம் பார்க்கப்படுகிறது. அதாவது, உதவியே கேட்காத கமலாத்தாளுக்கு தேடி வந்து பலசரக்குப் பொருட்கள் கொடுத்ததுடன், ஸ்டாலினுடன் பேசவைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள் திமுக.வினர்.
திமுக.வின் இந்த ‘மூவ்’ தெரிந்ததும், அதிமுக தரப்பு உஷாரானது. கோவையை சேர்ந்தவரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் மூத்த சகோதரர் எஸ்.பி.அன்பரசன் தங்களது நல்லறம் அறக்கட்டளை சார்பில் கமலாத்தாளை நேரில் சந்தித்து 50 கிலோ அரிசியும், பத்தாயிரம் பணமும் கொடுத்திருக்கிறார். இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் ஓரளவு செல்வாக்கு உடைய பாரதிய ஜனதாக் கட்சியும் கமலாத்தாளை சந்தித்து உதவிகள் வழங்கினர். பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் 600 இட்லிக்களை தலா ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வந்து கமலாத்தாள் பாட்டி, விலைவாசி உயர்வு காரணமாக இட்லி எண்ணிக்கையை 400 ஆகக் குறைத்திருக்கிறார். எனினும் இட்லி விலையை உயர்த்துவது இல்லை என்பதில் உறுதியாகவே இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து அரசியல் கட்சிகள் உதவியதால், விலைவாசியை சமாளிக்க கமலாத்தாளுக்கு உதவிகரமாக இருக்கும். ‘நான் யாரிடமும் உதவி கேட்கமாட்டேன். தந்தால் மறுக்க மாட்டேன்’ என்பதையும் பாலிஸியாக வைத்திருக்கிறார், இந்த விஐபி பாட்டி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.