கோவையில் அடுத்தடுத்து 3 கோயில்கள் முன்பு மர்ம நபர் ஒருவர் உபயோகமற்ற பொருட்களை தீ வைத்து எரித்து பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவத்தில், சேலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில், நேற்று அடுத்தடுத்து 3 கோயில்களில் உபயோகமற்ற பொருட்களை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கோவையில் மத உணர்ச்சியை தூண்டி கலவரத்தை தூண்டி அமைதியை கெடுக்கும் எண்ணத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோக்களைக் கைப்பற்றி, அந்த மர்ம நபரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோவையில் கோயில்கள் முன்பு தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நபர் போலிசாரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஜூலை 18ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை மாநகரில் 3 கோயில்களின் அருகில் யாரோ மர்ம நபர் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் டயர் மற்றும் உயயோகமற்ற பொருட்களை தீயிட்டு எரித்து இந்துக்களின் உணர்ச்சிகளை பொங்கச் செய்து கலவரத்தை தூண்டி அமைதியை கெடுக்கும் எண்ணத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி2 பந்தைய சாலை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பி4 உக்கடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் சட்டம் மற்று ஒழுங்கு, தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
புலன் விசாரணையில் அருகிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தபோது, சம்பவத்தை செய்த நபர் அடையாளம் காணப்பட்டார். பின்னர், தனிப்படையினர் சம்பவத்திற்கு காரணமான சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (48), என்பவரை இன்று அவினாசி சாலை ஆர்.ஜி.புதூர், எம்.ஜி. கார் ஷோரூம் முன்பு கைது செய்தனர். விசாரணையில் அவர் குடும்ப பிரச்னை இருப்பது அதனால், மன உளைச்சலில் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர், கஜேந்திரன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேற்படி கைது செய்யப்பட்ட நபர் எந்த ஒரு அமைப்பையோ கட்சியையோ சாரதவர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"