scorecardresearch

முஸ்லிம் கலாச்சாரத்துக்கும் கேரளா ஸ்டோரி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – தமுமுக

நடைமுறையில் எங்களின் இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுடன் நாங்கள் பழகுவதற்கும் ட்ரெய்லரில் காட்டப்பட்டதற்கும் முற்றிலும் மாறாக உள்ளது.

Coimbatore
The Kerala stories Movies issue

தி கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கோவை மாவட்ட தலைவர் சார்புதீன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் முஸ்லிம்களின் கலாச்சாரம், வாழ்வியலை தவறாக சித்தரித்து மத மோதலை உருவாக்கும் திரைப்படம். இந்தத் திரைப்படம் வெளியாவதை கண்டித்து தமுமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தி கேரளா ஸ்டோரிஸ் ட்ரெய்லரை பார்க்கின்ற போது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. நடைமுறையில் எங்களின் இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுடன் நாங்கள் பழகுவதற்கும் ட்ரெய்லரில் காட்டப்பட்டதற்கும் முற்றிலும் மாறாக உள்ளது.

முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரிக்கும் புர்கா, கேரளா ஸ்டோரிஸ் போன்ற திரைப்படங்கள் ரமலான் மாதத்திலும் கூட நிறைய வந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் கலாச்சாரத்திற்கும் இந்த திரைப்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் வரும் இது போன்ற படங்களுக்கு அரசு ஆதரவாக இருப்பது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் மோடி பற்றி வந்த பிபிசி ஆவணப்படம் உடனடியாக தடை செய்யப்பட்டது. கருத்து சுதந்திரம் என்பது பொதுவாக இருக்க வேண்டும். முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் திரைப்படங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதை எதிர்த்து நாங்கள் நியாயமாக போராடினால் எங்களை தேச துரோகிகள் என்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என நாங்கள் போராடுகிறோம். இந்த திரைப்படத்தை தயாரித்தவர் ஒரு குஜராத்தி எனவே அவரின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும். இத்தகைய படங்களை தயாரிப்பவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இது போன்ற படங்கள் மூலம் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றும் சதி திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என உளவுத்துறை எச்சரித்தும் நீதிமன்றம் மூலமாக இந்த திரைப்படத்தை வெளியிடுகின்றனர். காவல்துறையும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது.

காவல்துறை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பெண்களை மதம் மாற்றி அவர்களை நாடு கடத்துவதாக தவறாக சித்தரித்துள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதக் கலவரத்தை தூண்டுவதற்கான சதித்திட்டமாக தெரிகிறது என்றார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore the kerala stories movie islam culture