இளம் பெண்ணின் கைப்பையை திருடி, ஏ.டி.எம் எந்திரத்தில் 84 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய பெண்கள் சிக்கினர்.
Advertisment
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகள் கலைச்செல்வி. இவர் தனது தாயாருடன் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு பேருந்து மூலம் வந்து கொண்டு இருந்தனர்.
அரசு மகளிர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்காக பணம் எடுக்க தனது கைப் பையை கலைச்செல்வியின் தாயார் எடுக்க முயன்ற போது பையில் வைத்து இருந்த சிறிய பை காணாமல் போனது தெரியவந்தது.
அதே நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 84 ஆயிரம் ரூபாய் பணம் ஏ.டி.எம் மூலம் எடுத்ததாக கலைச்செல்வியின் தாயார் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி அவரது தாயாரும் உடனே மகளிர் பாலிடெக்னிக் அருகே உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு இரண்டு பெண்கள் பணத்துடன் நின்று கொண்டு இருந்தது தெரிய வந்தது.
உடனே அவர்கள் இருவரையும் கலைச்செல்வியும் அவரது தாயாரும் கையும், களவுமாக பொதுமக்கள் உதவியுடன் பிடித்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திருடியது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பகவதி என்பவரின் முதல் மனைவி மாரி என்கிற காளியம்மாள் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சித்ரா என்கிற செல்வி என்பதும், தொடர்ந்து பிக்பாக்கெட் தொழிலை செய்து வந்ததும் தெரிய வந்தது. பிறகு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“