Coimbatore tribal villages and corona relief materials : கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அவசிய பொருட்களும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் பழங்குடிகள் இந்த காலத்தில் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர். பொள்ளாச்சி ஆனமலை பகுதிகளில் மலசர், மலமலசர், எரவாளர், காடர், முதுவர், புலையர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த பழங்குடிகளுக்கும் அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளது.
கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடிகளின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், அது தொடர்பான அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. பெருந்தொற்று காலத்தில் பழங்குடியினருக்கு நிவாரணப் பொருட்களை சமர்ப்பிப்பதில் என்னென்ன பிரச்சனைகள் இருந்தது என்பது தொடர்பாக அங்கு செயல்பட்டு வரும் தன்னார்வலர்களிடம் பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.
மேலும் படிக்க : கேரளாவில் கனமழை ; அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு… மூணாறில் 5 பேர் பலி
ஆனமலை புலிகள் காப்பகமும் பழங்குடிகளின் நிலையும்
ஆனமலை புலிகள் காப்பகத்தின் கீழ் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகள் வருவதால், இதன் அடிப்படை உள்கட்டமைப்பு வசதி என்பது வனத்துறையினர் அனுமதியை பெற்ற பிறகு தான் சாத்தியம் ஆகும். பல்வேறு பழங்குடி கிராமங்களுக்கு மின்சார வசதிகளும், சாலை வசதிகளும் கிடையாது. பொதுபோக்குவரத்தும் கிடையாத சூழலில் இங்கிருக்கும் மக்களுக்கு நல உதவி திட்டங்கள் எப்படி கொண்டு சேர்க்கப்பட்டது?
முன்பே கூறியது போன்று வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பகுதிகள் அனைத்தும் வருவதால் எந்த ஒரு நலத்திட்டத்தை செயல்படுத்த வனத்துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது. சில நேரங்களில் தொண்டு நிறுவனங்களில் இருந்து வரும் அத்தியாவசிய பொருட்கள் வனத்துறையினரின் தவறான வழிநடத்துதலின் காரணமாக பழங்குடி அல்லாத மக்களுக்கு கொடுக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பூச்சிக்கொட்டாம்பாறை, மாவடப்பு, காட்டுப்பட்டி, குழிப்பட்டி, குறுமலை, மேல்குறுமலை ஆகிய பகுதிகளுக்கு உதவிப் பொருட்களை எடுத்து செல்ல முயன்ற போது அட்டக்கட்டி செக்போஸ்ட்டில் தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முறையாக திருப்பூர் மாவட்டத்தின், உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்பு தான் அங்கு செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. திருப்பூரில் வருவாய்த்துறை கோட்டாட்சியர் ரவிக்குமார் தன்னார்வலர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
மேலே கூறப்பட்டிருக்கும் மலைகிராமங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் நிலை குறித்து யோசிக்காமல் அதிகார பகிர்வு காரணமாக தோன்றும் வெறுப்பு மனப்பான்மையை வனத்துறையினர் கொண்டுள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு. அந்த கிராமங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இந்த பொருட்கள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்லாறு பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் காடர்களுக்கு பொருட்களை தர துணை தாசில்தார் மூர்த்தி சென்றுள்ளார். அங்கே பணியாற்றி வரும் வனத்துறை அதிகாரிக்கு குறுஞ்செய்தி மூலம், தகவல் முன்பே அறிவிக்கப்பட்டது. அழைப்பு விடுத்தும் பதில் இல்லை. என் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு ஏன் நீங்கள் பொருட்கள் வழங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கல்லாறு மற்றும் உடும்பன்பாறை காடர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 4 கி.மீ நடந்து வந்து பொருட்களை வாங்க காத்திருந்தனர். பாலகனாறு பகுதியில் காத்துக் கொண்டிருந்த மக்களை பார்த்து “அவர்கள் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வீர்களா? ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்” என்று அச்சம் ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளார்.
வனத்துறையினர் மட்டுமல்லாமல், இங்கே பணியாற்றும் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் தங்களுக்கு தான் காடு என்ற ரீதியில் பேசும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளிமுடி பழங்குடி மக்களுக்கு பொருட்களை தர துணை தாசில்தார் மூர்த்தி சென்ற போது, மின்வாரியத்துறையில் பணியாற்றும் ஜூனியர் எஞ்சினியர் ஒருவர் “நீங்கள் யார் அவர்களுக்கு உதவி செய்ய? அவர்களுக்கு நீங்களேன் உதவ வேண்டும்? என்ற ரீதியில் பிரச்சனை செய்துள்ளார்.
விருப்பப்பட்ட என்.ஜி.ஓக்களுக்கு மட்டுமே அனுமதி
முறையான அனுமதி பெற்று காட்டில் இருக்கும் பழங்குடி மக்களுக்கு உதவ வேண்டும் என்று செல்லும் என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள் மூலம் அனுமதி பெற்று செல்லும் என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில என்.ஜி.ஓக்கள் பழங்குடி மக்களுக்கு உதவுகிறோம் என்று அனைத்தையும் எடுத்து வந்து வைத்துவிட்டு அடையாள அட்டை இருக்கிறதா, ரேசன் அட்டை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி வதைக்கும் செயல்களையும் செய்துள்ளனர். பழங்குடியினர்களின் மக்கள் தொகையே மிகவும் குறைவு. பழங்குடியினர் தவிர அந்த பகுதிகளில் வேறு யாரும் வசிப்பதும் இல்லை. இந்நிலையில் ஏன் ஆதார் அட்டையெல்லாம் கேட்க வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
என்.ஜி.ஓக்கள், பழங்குடியினருக்கு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தாலும் கூட, அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே நிறைய பொருட்கள் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் வேறு யாருக்காவது தரலாம் என்று பழங்குடியற்றவர்களுக்கு பொருட்களை கொடுக்க வனத்துறையினர் ஊக்குவித்துள்ளனர்.
மேலும் படிக்க : கொரோனா இல்லை… ஆனா வாழ்வாதாரம் போச்சே! இருளர்களுடன் ஐஇ தமிழ் நேர்காணல்
தன்னார்வலர்களின் கருத்து
ஏக்தா பரிஷத் அமைப்பின் தன்னார்வலர் தன்ராஜ் இது குறித்து பேசிய போது, ”கோவை மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடிகள் உள்ளனர்? எத்தனை மலைகிராமங்கள் இருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேள்வி எழுப்பிய போது, பழங்குடியினர் நல அலுவலர்களிடமே பதில் இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. இவர்கள் பழங்குடி மக்களுக்கு உதவுவார்களா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது. பலரும் இது தொடர்பாக எங்களிடமே கேள்வியை முன் வைக்கின்றனர். அங்கே செல்ல எங்களிடமே வாகன ஏற்பாடுகள் வேண்டும் என்று கேட்கின்றார்கள்.
போதுமான தரவுகள் அரசிடமே இல்லாத போது, எதன் அடிப்படையில் பழங்குடியின மக்களுக்கு இவர்கள் உதவுவார்கள் என்ற சந்தேகமே மேலோங்குகிறது. இந்த பகுதியை நன்கு அறிந்த மக்களையே இவர்கள் தடுத்து நிறுத்தும் போது, பழங்குடியினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கொடுக்க இருக்கும் ரூ. 10,000 எப்படி முறையாய் சென்று சேரும்? முறையாக அவர்களுக்கு அனைத்தும் கொடுக்கப்படுமா என்பதை எதன் அடிப்படையில் உறுதி செய்வது?
இங்கு இருக்கும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் பழங்குடியினர் என்றால், கேட்டு நிற்கும் மக்கள் என்று எண்ணம் இருக்கிறது. உண்மை என்னவென்றால் பழங்குடியினர் தான் நம் அனைவருக்கும் கொடுக்கும் வள்ளல்கள். அவர்களை இப்படி உதவிக்காக அலைக்கழிப்பது முறையானது அல்ல” என்று கூறுகிறார்.
”இங்கிருக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் நாங்கள் தான் எல்லாமே என்று கூறும் வனத்துறையினர் இது நாள் வரையில், கொரோனா நிவாரணமாக இந்த பழங்குடி மக்களுக்கு எந்த விதமான உதவியையும் அவர்கள் வழங்கவில்லை. பூச்சிக்கொட்டாம்பாறையில் இருக்கும் ஒரு மாணவி 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றார் என்று கூறும் போது, அரசியல்வாதிகளும் வனத்துறையினரும் பெருமையில் பங்கேற்க போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். ஆனால் அந்த பகுதியில் இந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேச ஒருவரும் முன்வரவில்லை” என்று கூறினார் பெயர் சொல்ல விரும்பாத சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த பகுதி வளம் கொழிக்கும் ஒரு பகுதி. இங்கு பழங்குடிகளின் நிலை குறித்து கவலைப்பட யாரும் இல்லை. அவர்களை இங்கிருந்து வெளியேற்றிவிடத்தான் பலரும் முயற்சிக்கின்றனரே தவிர அவர்கள் நலன் மீது அக்கறை செலுத்த யாரும் இல்லை என்பதையே அங்கு உரையாடிய பல பழங்குடிகளின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்… கல்லாறு மக்களின் நிலை என்ன?