Coimbatore, Madurai, Trichy Updates: கேரளாவில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி: திருவாரூர் பா.ஜ.க நிர்வாகி கைது

Tamil Nadu News Update: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rob arrest tir

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டும் செல்ல அனுமதி: திருநெல்வேலி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று முதல் பக்தர்கள் அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

  • Jul 23, 2025 20:38 IST

    கேரளாவில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி: திருவாரூர் பா.ஜ.க நிர்வாகி கைது

    கேரளாவில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்த வழக்கில், திருவாரூர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் ஆலப்புழாவில் நடந்த வழிப்பறி சம்பவத்தில், நகைக்கடை அதிபரிடம் பணம் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே திருப்பூரைச் சேர்ந்த இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருவாரூர் நகர பா.ஜ.க இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் இன்று கைது செய்யப்பட்டார். வழிப்பறி சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீராமின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Jul 23, 2025 19:48 IST

    நாமக்கல் கிட்னி விற்பனை: 2 மருத்துவமனைகளின் கிட்னி அறுவை சிகிச்சைஉரிமம் தற்காலிக நிறுத்தம்

    நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரத்தில், 2 மருத்துவமனைகளின் கிட்னி அறுவை சிகிச்சைக்கான உரிமம் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, திருச்சி சிதார் மருத்துவமனைகளின் கிட்னி சிகிச்சை உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை தற்காலிக நிறுத்தம் செய்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.



  • Advertisment
  • Jul 23, 2025 18:47 IST

    ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறப்பு

    வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     



  • Jul 23, 2025 18:23 IST

    அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

    கோர்ட் உத்தரவை மீறி, ஆவணங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 23, 2025 17:46 IST

    குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க ஆணை

    ஈரோடு குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் புஞ்சை பாசன நிலங்களுக்கு, சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) நாளை முதல் வரும் 30ம் தேதி வரை 7 நாட்களுக்கு, 14.515 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை மற்றும் புஞ்சைத்துறையம்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



  • Jul 23, 2025 17:08 IST

    தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது

    தூத்துக்குடி ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஸ்து காந்த், செல்வபூபதி, பிரவின் ஷா, ரிஷிகபூர், சின்னதம்பி, வரஷன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேர் கைதான நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு, காலை உணவு சாப்பிட சென்றபோது மதன்குமார் கொலை செய்யப்பட்டார்.



  • Jul 23, 2025 16:37 IST

    காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,896 கனஅடியிலிருந்து 21,514 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 23, 2025 16:32 IST

    குப்பை கிடங்கிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் - மக்கள் அவதி

    சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் தீ கிடுகிடுவென பரவத்தொடங்கியது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த மானாமதுரை தீயணைப்புத்துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ வைத்த மர்ம நபர்கள் யார் என சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.



  • Jul 23, 2025 16:15 IST

    ஒட்டுக்கேட்பு கருவி காவல் துறையிடம் ஒப்படைப்பு

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி விழுப்புரம் கிளியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது



  • Jul 23, 2025 15:02 IST

    வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

    நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், ஒரே நாளில் ரூ.30 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jul 23, 2025 12:46 IST

    VINFAST ஆலையை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

    தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் EV கார் உற்பத்தி தொழிற்சாலையை வரும் 31ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2024 பிப்ரவரியில் ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், 15 மாதங்களிலேயே உற்பத்தி தொடங்கவுள்ளது. ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டம்



  • Jul 23, 2025 12:14 IST

    தியாகதுருகம் அருகே மீன்பிடித் திருவிழா; 20 கிராம மக்கள் திரண்டனர்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள பல்லகச்சேரி கிராம ஏரியானது பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வளர்க்க ஏலம் விடப்பட்டது. மீன்கள் அறுவடை முடிந்ததால் இன்று காலை மீன்பிடி திருவிழா அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு இன்று சுமார் 2 டன் மீன்களை பிடித்து சென்றனர்.



  • Jul 23, 2025 12:02 IST

    வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 5வது நாளாக குளிக்கத் தடை!

    வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 5வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



  • Jul 23, 2025 11:07 IST

    மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதால் மக்கள் அவதி

    ஆம்பூர் ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீருடன், கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். முறையான கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால், நீர் தேங்கி இருப்பதாக குற்றம் சாட்டும் மக்கள், அதனை வெளியேற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jul 23, 2025 10:12 IST

    278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் பறிமுதல்

    கோவையில் செயல்பட்டு வரும் 37 இ-காமர்ஸ் குடோன்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, 278 கிலோ காலாவதியான பேரீச்சம் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Jul 23, 2025 09:36 IST

    விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன

     விருதுநகர் மாவட்டத்தில் 9 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி விருதுநகர் பட்டாசு ஆலைகளில் ஜூலை 14 ஆம் தேதி முதல் 15 குழுக்கள் ஆய்வு. ஆய்வு அச்சகத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு வழங்காத ஆலைகலை மூல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதால் மூடியிருந்த ஆலைகள் திறக்கப்பட்டன. 



  • Jul 23, 2025 08:59 IST

    சோழகங்கம் ஏரியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Jul 23, 2025 08:15 IST

    15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது.



  • Jul 23, 2025 08:12 IST

    சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அரசு பேருந்துகளில் மட்டும் செல்ல அனுமதி

    திருநெல்வேலி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு இன்று முதல் பக்தர்கள் அரசு பேருந்துகளில் மட்டுமே செல்ல அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: